×

லாரிகள், கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை; அரிஸ்டோ மேம்பாலம் இருவழி பாதையானது: அலுத்துக்கொண்ட மக்களே ஸ்வீட் எடுத்துக்கொண்டாடுங்கள்

திருச்சி: போக்குவரத்து இடையூறின்றி அரிஸ்டோ மேம்பாலத்தில் பொதுமக்கள் இனிதே பயணம் செய்யும் வகையில் இருவழி பாதையாக மாற்றம் செய்யப்படுவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக சத்திய பிரியா பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை காக்கவும், மாநகரத்தில் போக்குவரத்து நொிசலை குறைக்கவும், சாலை விபத்துக்களை தடுக்கும் வகையிலும் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்படி அரிஸ்டோ மேம்பாலத்தில் இருவழி பாதையாக செயல்பட உள்ளது குறித்து திருச்சி மாநகர கமிஷனர் சத்திய பிரியா தெரிவித்துள்ளதாவது:- கடந்த மே.29ம் தேதி அரிஸ்டோ உயர்மட்ட மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டு, மன்னார்புரம் மற்றும் எடமலைப்பட்டி புதூரிலிருந்து வரும் வாகனங்கள் மட்டும் பாலத்தின் மேலே செல்லவும், திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு பாலத்தின் கீழே செல்லவும் ஒருவழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டு வந்தது.

அரிஸ்டோ உயா்மட்ட மேம்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்றும் பொருட்டு பொதுமக்கள் போக்குவரத்து நொிசலின்றி எளிதாக பயணிக்க வசதியாக போக்குவரத்து காவல் அதிகாரிகளுடன் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அரிஸ்டோ மேம்பாலத்தில் பயணம் செய்வதற்கு, இன்று 5ம்தேதி முதல் இருவழி பாதையாக வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்படுகிறது. திண்டுக்கல் சாலை மார்க்கத்திலிருந்தும், மத்திய பேருந்து நிலையம் மார்க்கத்திலிருந்தும், எடமலைபட்டி புதூர் செல்லும் வாகன ஒட்டிகள் பாலத்தின் மேல் ஏறி செல்ல அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் (இலகுரக வாகனம் மட்டும்) மற்றும் பயணிகள் பேருந்துகள் ஆகிய வாகனங்கள் மட்டுமே பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதியில்லை.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, இருவழிபாதையாக பயன்பாட்டில் உள்ள மேம்பால சாலையின் நடுவில் தொடக்கத்தில் இரும்பு போிகாட்ஸ் அமைத்தும், அதன்பின்னர் பிளாஸ்டிக்கால் ஆன பொல்லார்டு அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தில் திசை காட்டும் சைகை பலகை மற்றும் மிளிரும் எல்இடி லைட்டுகள் (மிளிரும் எல்இடி பிளிங்கர்ஸ்), விழிப்புணர்வை ஏற்படுத்தும் டிஜிட்டல் பலகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாலத்தில் நான்கு இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பாலத்தில் போக்குவரத்து காவலர்கள் தினமும் சுழற்சி முறையில் போக்குவரத்து பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் மேலே 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வாகன ஒட்டிகள் மேம்பாலத்தில் 30 கி.மீ. வேகத்திற்கு மிகாமல் செல்ல வேண்டும். எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து விழிப்புடன் மேம்பாலத்தில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சாலை மார்க்கத்திலிருந்தும், மத்திய பேருந்து நிலையம் மார்க்கத்திலிருந்தும், எடமலைபட்டி புதூர் செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தின் மேல் ஏறி செல்ல அனுமதியில்லை. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் (இலகுரக வாகனம் மட்டும்) மற்றும் பயணிகள் பேருந்துகள் ஆகிய வாகனங்கள் மட்டுமே பாலத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல அனுமதியில்லை.

The post லாரிகள், கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை; அரிஸ்டோ மேம்பாலம் இருவழி பாதையானது: அலுத்துக்கொண்ட மக்களே ஸ்வீட் எடுத்துக்கொண்டாடுங்கள் appeared first on Dinakaran.

Tags : Aristo ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...