×

காளையார்கோவில் அருகே வாமனச் சின்னம் பொறித்த நில தானக்கல் கண்டுபிடிப்பு

காரைக்குடி: காளையார்கோவில் அருகே வாமனச் சின்னம் பொறித்த நில தானக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என காரைக்குடியை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், காளையார்கோவில் அருகே இலந்தகரை ரமேஷ் மற்றும் வரலாற்று ஆய்வு மாணவர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கொடுத்த தகவலின்படி பெரியகிளுவச்சி என்ற பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள கண்மாய்கரை பகுதியில் வாமனச் சின்னங்கள் கோட்டோவியமாக பொறிக்கப்பட்ட எல்லைக்கல் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தானக்கல் நாயக்கர் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இதுபோன்ற வாமனக் குறியீடு வைணவக் கோவில்களுக்கு நிலங்களை தானமாக கொடுக்கும் போது இடம் பெறுவது வழக்கம். மன்னர்கள் கோவிலுக்கும், கோவில் பணி செய்பவர்களுக்கும் நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.

திருமாலின் 10 அவதாரங்களாக கூறப்படுவதில் ஐந்தாவது அவதாரமாக வாமன அவதாரம் உள்ளது. நிலம் தொடர்பான ஆவணங்களில் இந்த வாமன அவதார உருவம் மன்னர் ஆட்சி காலத்தில் பொறிப்பது வழக்கமாக கொண்டு இருந்துள்ளனர். இந்த தானக்கல்லில் குடை, கமண்டலம் மற்றும் செண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் செண்டு என்பது அப்போது ஆட்சியில் உள்ள மன்னர்களின் கையில் இருப்பது ஆகும். மன்னரின் அதிகாரம் இந்த எல்லை வரை உள்ளதாகவும் பொருள்படுகிறது. அதேபோல் கலசங்குடி என்ற பகுதியிலும் வாமன அவதார குறியீடு கொண்ட தானக்கல் குளக்க கரை அருகே கண்டறியப்பட்டுள்ளது. இதில் குடை, செண்டு, கமண்டலம் மற்றும் இரண்டு பாதங்கள் கோட்டோவியமாக இடம் பெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டம் என்பது இதுபோன்ற பல்வேறு கல்வெட்டுகள் தொடர்ந்து கண்டறிப்பட்டு வருவதன் மூலம் தெரிய வருகிறது என்றார்.

The post காளையார்கோவில் அருகே வாமனச் சின்னம் பொறித்த நில தானக்கல் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Karaikudi ,Balasubramanian ,Kalaiyarkovil ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...