×

மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை

சேலம், ஜூலை 5: சேலம் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் இன்றியமையா பொருட்கள் தரத்துடன் மக்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே ரேசன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பொது விநியோகத் திட்டத்தினைச் செம்மைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ரேசன் கடை, தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டரும், உறுப்பினர்களாக எம்பி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரும் உள்ளனர். இக்குழுவில் டிஆர்ஓ மாவட்ட குறைதீர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சேலம் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்புக் குழு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை வகித்து பேசியதாவது: சேலம் மாவட்டத்தில் 11,00,207 குடும்ப அட்டைகள் மூலம் 33,86,343 நபர்கள் பயனடைந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 1,709 ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேசன் கடைகளில் தரமான அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுவினியோகத்திட்டம் ஆகிய துறைகளின் கூட்டுமுயற்சியால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில், 442 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021-2022ம் ஆண்டில் மட்டும், இக்கடைகளுக்கான வாடகையாக, ₹ஒரு கோடியே 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கும் 100 ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டடங்கள் கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது விநியோகத்w திட்டத்தில் சேவை குறைபாடு அல்லது பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாள்களுக்குள் அலுவலர்களால் தீர்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை மாவட்ட குறைதீர் அலுவலரிடமோ அல்லது மாவட்ட குறைதீர் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரிடமோ நேரடியாகவோ, எழுத்து வடிவிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார். கூட்டத்தில், டிஆர்ஓ மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜா, கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் ரவிக்குமார், சேலம் ஆர்டிஓ அம்பாயிரநாதன், கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் சின்னதுரை, தேவிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 100 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Rayson ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை