×

25 உழவர் சந்தைகள் புனரமைப்பு பணிக்கு ₹8.75 கோடி நிதி ஒதுக்கீடு அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில்

வேலூர், ஜூலை 5: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகள் புனரமைப்பு பணிக்கு ₹8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் இடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 1999ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உழவர் சந்தை திட்டத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தைகளின் முக்கிய நோக்கம், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகர்வோர்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்குவதும் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு உழவர் சந்தையிலும் நாள்தோறும் சுமார் 30 டன் முதல் 120 டன் வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு சந்தையிலும் ₹30 லட்சம் முதல் ₹80 லட்சம் வரை காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு உழவர்சந்தையிலும் 200 முதல் 700 விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

இதற்கிடையில், பழுதடைந்த நிலையில் உள்ள 25 உழவர் சந்தைகள் புனரமைப்பு பணிக்காக மொத்தம் ₹8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், அலுவலக அறை புதுப்பித்தல், கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், குடிநீர் அமைப்பு, பாதுகாப்பு சுவர், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், மின்னணு எடை, வடிகால் மறுசீரமைப்பு, கூரை பழுது பார்த்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள ₹8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த 25 உழவர் சந்தைகளுக்கு தேவையான சீரமைப்பு பணிகள் மற்றும் கட்டுமான பணிகளை செய்து, அதன் முடிவு அறிக்கையை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குனர் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதி வரம்பிற்குள் தேவைப்பட்டால் இடங்கள், பணிகளை மாற்றுவதற்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குனருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இப்பணிகள் தொடர் செலவுகளை சம்பந்தப்பட்ட விற்பனைக்குழு நிதியிலிருந்து ஈடு செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குனருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 25 உழவர் சந்தைகள் புனரமைப்பு பணிக்கு ₹8.75 கோடி நிதி ஒதுக்கீடு அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tiruvannamalai ,Tirupattur ,Dinakaran ,
× RELATED ஒரே நாளில் ₹8.20 கோடிக்கு மது விற்பனை...