×

ஆழ்வார்திருநகரியில் தீ விபத்து நிகழ்ந்த குப்பை கிடங்கில் மீண்டும் கழிவுகளை கொட்டும் பேரூராட்சி நிர்வாகம்

வைகுண்டம், ஜூலை 5: ஆழ்வார்திருநகரியில் தீ விபத்து நிகழ்ந்த குப்பை கிடங்கில் மீண்டும் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் கொட்டுவது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆழ்வார்திருநகரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்வார்திருநகரி ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள தென்கால் வாய்க்கால் கரையோரம் கொட்டப்பட்டு வந்தது. குடியிருப்புகள் அதிகமுள்ள இப்பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மழை காலங்களில் குப்பைகளில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. குப்பைகளோடு குப்பைகளாக மழைநீர் தென்கால் வாய்க்காலில் கலந்தது. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு குப்பைகள் வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் சிலர் இன்னும் குப்பைகளை கொட்டி வருவதால் அவற்றை முழுமையாக அகற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் அவற்றை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே குப்பை கிடங்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டு அருகிலுள்ள முட்செடிகள், தென்னை மரம் மற்றும் வாழை மரங்களுக்கும் தீ பரவியது. இதனால் குப்பை கிடங்கு பகுதி முழுவதுமே புகைமூட்டமாக சூழ்ந்து பொதுமக்களுக்கு சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தியது. தகவலறிந்ததும் வைகுண்டம் தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஞானதுரை தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வரும் மழை காலத்திற்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியிலுள்ள குப்பை கிடங்கை முழுமையாக அகற்றிட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து தினகரனிலும் செய்தி வெளியானது. இந்த குப்பை கிடங்கில், கழிவுகள் அதிகமாக தேங்கி கிடப்பதால் புகைமூட்டம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், நேற்று ஆழ்வார்திருநகரி பேரூராட்சி நிர்வாகத்தால் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆழ்வார்திருநகரியில் தீ விபத்து நிகழ்ந்த குப்பை கிடங்கில் மீண்டும் கழிவுகளை கொட்டும் பேரூராட்சி நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Alwarthinagari ,
× RELATED ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரி...