×

பெரியநாயக்கன்பாளையம் அருகே நில அளவீடிற்கு வந்த அதிகாரிகளை முற்றுகை

 

பெ.நா.பாளையம், ஜூலை 5: பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட மத்தம்பாளையம் கிராமத்தில் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் வீடு இல்லாத பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இங்கு உள்ள திகம்பரேஸ்வரர் கோவிலுக்கு அருகில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீடுகள் கட்டித்தருவதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக நில அளவீடு செய்து தர வேண்டும் என்று பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா, பிளிச்சி மேற்கு கிராம நிர்வாக அலுவலர் யமுனா மற்றும் சர்வேயர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர்.

அளவீடு செய்ய அதிகாரிகள் வந்துள்ளதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், 2013ம் ஆண்டே இந்த இடத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மனைகள் எங்கு உள்ளது என்று தெரியவில்லை. அதற்கு செல்ல பாதையும் இல்லை. ஆகவே அந்த மனைகளுக்கு உரிய தீர்வு கண்டுவிட்டு அளவீடு செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வெளியே செல்ல விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோவை வடக்கு வட்டாட்சியர் தங்கராஜ், பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதிகாரிகளை மீட்டனர். இதன் காரணமாக அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பெரியநாயக்கன்பாளையம் அருகே நில அளவீடிற்கு வந்த அதிகாரிகளை முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Periyanayakanpalayam ,B.N.Palayam ,Katanchi hill ,Madtambalayam ,Blichy panchayat ,Dinakaran ,
× RELATED காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாததால்...