×

சரத்பவார் கட்சியில் இருந்து அஜித்பவார் வெளியேறியதால் பெரிய பாதிப்பு இருக்காது: பிரசாந்த் கிஷோர் சொல்கிறார்

பாட்னா: சரத்பவார் கட்சியில் இருந்து அஜித்பவார் வெளியேறியதால் பெரிய பாதிப்பு இருக்காது என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நடந்தது சரியானதா, இல்லையா என்பதை அந்த மாநில மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பொதுவாக சில எம்எல்ஏக்கள் வெளியேறுவதால் மட்டும் ஒரு கட்சி மக்களிடம் இருந்து தனது ஆதரவை இழக்காது. அஜித்பவார் தலைமையிலான எம்எல்ஏக்கள் வெளியேறியது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் எந்த தீவிரமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும் மகாராஷ்டிராவில் நடந்த பிளவு அந்த மாநிலத்திற்கு வெளியே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஏனெனில் கடந்த ஆண்டு பீகாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் வேறு எந்த மாநிலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான புதிய சிபிஐ குற்றப்பத்திரிக்கையை பொறுத்தவரையில் தவறு செய்ததாக கூறி சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் எந்த அரசியல்வாதியையும் மக்கள் வெறுப்பதில்லை. ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவர்களை மட்டும் குறிவைப்பது கவலையளிக்கும் விஷயமாக மாறி வருகிறது. அதே சமயம் மத்தியில் ஆளும் ஆட்சியுடன் சமாதானம் செய்தவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் ஒரு தலைவருக்கு எதிராக எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் ஆதரவை பெறாது என்பது என் எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பா.ஜவை வீழ்த்துவதற்கு வலுவான காரணம் தேவை
பீகார் மாநிலம் பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அடுத்த கூட்டம் இந்த மாதம் 17, 18ம் தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. இதுபற்றி தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மட்டுமே தேர்தலில் வெற்றியை கொண்டு வராது. மாறாக எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு வலுவான காரணம் தேவை. அந்த காரணத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் மட்டுமே தேர்தல் பலன்களை அறுவடை செய்ய முடியும். மாறாக கூட்டணி அடிப்படையிலான கணக்கு மட்டும் இங்கு வெற்றியை தராது. ஆளும் பா.ஜவுக்கு எதிரான சூழலை உருவாக்குவதில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற முடியும். அவசரநிலை நாட்டில் அமல்படுத்தப்பட்ட போது பாட்னாவில் ஜெயபிரகாஷ் நாராயணின் ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றது. வி.பி. சிங்கின் ஆட்சியை பிடிக்க போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு முன்னிலை வகுத்தது. எனவே பா.ஜவுக்கு எதிராக வலுவான காரணம் இல்லாத வெறும் அரசியல் எண்கணிதம், மக்களின் ஆதரவை பெற வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post சரத்பவார் கட்சியில் இருந்து அஜித்பவார் வெளியேறியதால் பெரிய பாதிப்பு இருக்காது: பிரசாந்த் கிஷோர் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Ajitpawar ,Sarathpawar ,Prashant Kishore ,Patna ,Sarathpawar party ,
× RELATED தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் அமைப்பில் இணைந்த பிரபல நடிகை