×

இறையன்பர்கள் போற்றும் வகையில் வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள் மடாலயம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: வியாசர்பாடி சாமியார் தோட்டம் கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இறையன்பர்கள் போற்றும் வகையில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலின் உபகோயிலான வியாசர்பாடி சாமியார் தோட்டம் கரபாத்திர சுவாமிகள் மடாலயத்தின் திருப்பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சென்னை மாநகராட்சி நகரமைப்பு குழுத் தலைவர் தா.இளைய அருணா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், வடபழனி ஆண்டவர் கோயில் துணை ஆணையர் இரா.ஹரிஹரன், உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாநகராட்சி கவுன்சிலர் ஜெ.டெல்லிபாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி:

கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயத்தில் கரபாத்திர சுவாமிகள் மற்றும் முத்தானந்த சுவாமிகளின் மகா குருபூஜைகள், நாக சதுர்த்தி மற்றும் பவுர்ணமி பூஜை போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மடாலயத்திற்கு சொந்தமான சொத்துகளை பல்வேறு ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறை தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். கரபாத்திர சுவாமிகள் மடாலயத்தை மேம்படுத்தும் வகையில் மதிற்சுவர் சீரமைப்பு, திருக்குள திருப்பணி, உலோக திருமேனி பாதுகாப்பு அறை, புதிதாக அன்னதானக் கூடம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், சித்தர் சமாதிகளுக்கு செல்வதற்கு பாதை அமைத்தல், கழிவறைகளை மேம்படுத்தல், நந்தவனம் சீரமைத்தல், புதிய நூலகம் அமைத்தல், யோகா வகுப்பு மற்றும் சமய சொற்பொழிவு மண்டபம் அமைத்தல் போன்ற 10 திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்படும். மேலும், இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். இந்த மடாலயத்திற்கு சொந்தமான இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான தனி அலுவலர் மூலம் அளவீடு செய்து இதன் சொத்துகள் எவை எவை என்பதை கணக்கிடப்பட்டு பட்டா பெயர் மாற்றம் தொடர்பான பணிகள், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள், வாடகை வசூலிக்கும் பணிகள் போன்றவை இன்றைய தினம் முதல் தொடங்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்த பின்னர் அன்னதான திட்டம் உள்ளிட்ட பிற வசதிகளை படிப்படியாக செய்து தந்து இந்த மடாலயத்தினை இறையன்பர்கள் போற்றும் வகையில் மேம்படுத்தி தருவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களை புனரமைக்க 2022-23ம் ஆண்டிற்கு ரூ.100 கோடியும், 2023-24ம் ஆண்டுக்கு ரூ.100 கோடியும் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 200க்கும் மேற்பட்ட தமிழர்களுடைய அடையாளமாக திகழ்கின்ற பண்டைய காலத்து கோயில்களை புனரமைக்கின்ற பணிகளிலும், கடந்த காலங்களில் கேட்பாரற்று கிடந்த மடாலயங்களை புதுப்பிக்கின்ற பணிகளிலும் இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post இறையன்பர்கள் போற்றும் வகையில் வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள் மடாலயம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vyasarpadi Karabhadra Swamy Temple ,Minister ,PK Shekharbabu ,Perambur ,Vyasarpadi Samiyar Thotam Karabhadra Sivaprakasha Swami Monastery ,
× RELATED வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு...