×

தேசிய இனங்களின் மொழிகளை சிறுமைப்படுத்துவதா? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசும்போது, “நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள்தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று ஒன்றிய அமைச்சர் சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. ஒன்றிய பாஜ அரசு இந்திமொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியை திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும்.இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாடு என்பது பல்வேறு தேசிய இனங்களின் மொழி உரிமை, இன உரிமை, பண்பாட்டு உரிமையை ஏற்று மதித்து பாதுகாப்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை பாஜ உணர வேண்டும். அதை விடுத்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பாஜ அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.

The post தேசிய இனங்களின் மொழிகளை சிறுமைப்படுத்துவதா? ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vaiko ,Union Govt ,Chennai ,Madhyamik ,General Secretary ,Hindi Advisory Council ,Delhi ,Union Health ,Union Government ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...