×

மாங்கனி மாவட்டத்தை குறி வைத்துள்ள தாமரை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அரசியல் களத்தில் தன்னை கிள்ளு கீரையாக நினைக்கும் சேலம்காரருக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் தலைவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரின் சொந்த ஊரில் நூறு சதவீதம் பூத் கமிட்டி போடணும் என்று தாமரை கட்சி தலைமை கறார் உத்தரவு போட்டிருக்காம்… என்ன திடீர் உத்தரவு? பின்னணியில் ஏதோ பெரிதாக இருக்கும்போல என்று இலை, தாமரை ஆட்கள் பேசிக் கொண்டிருக்காங்க. அதாவது, பார்லிமென்ட் எலக்‌ஷன் ஜுரம் மெல்ல மாநிலம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இலைக்கும், தாமரைக்கும் கூட்டணி தொடருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியா இருக்காம். இதற்கிடையில் தேனிக்காரர், தாமரை தலைகளிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறோம் என்று தடாலடியாக அறிவிச்சாரு. ஆனால் சேலத்துக்காரரோ, தாமரையுடன் கூட்டணி பேசும் தேனிக்காரரு அவரது புது கட்சி சார்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அவருக்கும், இலைகட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லைனு பதிலடி கொடுத்தாரு. இதேபோல் இலையின் 2ம் கட்ட தலைவர்களும் தாமரையை வெறுப்பேத்தும் அளவுக்கு ேபசிக்கிட்டு இருக்காங்க.

இது ஒருபுறமிருக்க, தாமரை தலைமையோ வேற மாதிரி காய் நகர்த்துதாம். அதிலும் சேலத்துக்காரரின் ஊரிலுள்ள தாமரை நிர்வாகிகளுக்கு ஒரு கறார் உத்தரவு பறந்திருக்காம். வரப்போற பார்லிமென்ட் எலக்‌ஷன்ல, 11 தொகுதியையும் குறி வச்சு நீங்க வேலை பார்க்கணும். எல்லா தொகுதிகளிலும் 100 பர்சன்ட் பூத் கமிட்டி அமைக்கணும். கூட்டணி குழப்பம் எல்லாம் உங்களுக்கு தேவையில்லை. அதை நாங்க பார்த்துகிறோம். அதேபோல், தேனிக்காரர், குக்கர் பார்ட்டி, சின்ன மம்மி குரூப்புடன் தொடர்பில் இருக்கணும்னு சொல்லி இருக்கிறார்களாம். இதனால் சேலத்துக்காரருக்கு செக் வைக்குறதா, அதுவும் அவர் பிறந்து அரசியல் செய்த மாவட்டத்தில் என்று தாமரையின் மாநில தலைமை மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில சீட் கிடைக்க, 5 சி வரை கொடுக்க தயாராக இருக்கும் நபரை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வர்ற எலக்‌ஷன்ல இலைகட்சிக்காரங்களே வெயிலூர் தொகுதியில களம் இறங்க தயாராகிட்டாங்களாம். தலைமையும் பச்சைக்கொடி காட்டிட்டாங்களாம். வேட்பாளர் உத்தேச பட்டியலும் தயாராகி வருதாம். வெயிலூர் மாவட்டத்துல 2 எழுத்து இனிஷியலை கொண்ட ஒன்றியத்தோட செக்ரட்ரியும், குடியேற்றத்துல இருக்குற லுங்கி கம்பெனி அதிபர், மாஜி அமைச்சரின் நண்பர், காட்டுப்பாடியில தோல்வியடைந்த 2 எழுத்துக்காரர், பட்டு என்று முடியுற தாலுகாவைச் சேர்ந்த 3 எழுத்து பெண் உட்பட 10 பேர் வரையில, வாய்ப்பு கேட்டு மாஜி அமைச்சர்கிட்ட சரண்டராகியிருக்காங்களாம். இலை கூட்டணியில, ஒப்பந்தக்காரர் ஒருத்தரும் சீட்டு வாங்க காய் நகர்த்தி வர்றாராம். இதுல கொஞ்ச நாளுக்கு முன்னாடி, குடியேற்றம் பகுதியில இருக்குற 3 எழுத்து இனிஷியலை கொண்டவரோட இல்ல விழாவுக்கு, மாஜி அமைச்சர் போயிருக்காரு. அவர்கிட்ட, லுங்கி கம்பெனி அதிபர், எனக்கு வாய்ப்பு கொடுத்தா, தேர்தலில் 5 சி வரை செலவு செய்வேன். எப்பவும் உங்களுக்கு விசுவாசமா இருப்பேன்னு பேசியிருக்காரு. இதைக்கேட்ட மாஜி அமைச்சர், அவரோட தோளை தட்டிவிட்டு போனாராம். இதனால அந்த அதிபரு கனவுகள்ல மிதந்து வர்றாராம். எம்பி ஆகிட்டா.. கோயில்ல 10ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குறதா வேண்டிக்கிட்டதாக சொல்றாராம். இந்த வேண்டுதல்தான் இப்படி வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு… ெவயிலூர்ல நாடாளுமன்ற தேர்தலில் தாமரையா, இலையா என்பதை இந்த முறை கரன்சி தான் தீர்மானிக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘இலைக்கட்சி கவுன்சிலர் ஏன் தலையை தொங்கவிட்டபடி போறாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாநகராட்சியில் நூறு வார்டுகளில் மூன்று வார்டுகளில் மட்டும் இலை கட்சி கவுன்சிலர்கள் இருக்காங்க. இவர்களில், ஒருவர் பெண் கவுன்சிலர். மீதமுள்ள இருவரில் ஒருவர் பம்பரத்துல இருந்து இலை கட்சிக்கு தாவி கவுன்சிலர் ஆனவர். இன்னொருவர், ஏற்கனவே இலை கட்சி சார்பில் இதே மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, நிதிக்குழு தலைவராக இருந்தவர். இவர்கள், மூவரை தவிர, இலைக்கட்சி சார்பில் மாமன்ற கூட்ட அரங்கில் பேசுவதற்கு யாரும் இல்லையாம். அந்த அளவுக்கு இங்கு, இலைக்கட்சி நிலைமை பரிதாபமாக உள்ளது. ஆனாலும், இவர்களில் ஒருவருக்கு குசும்பு விடவில்லை. நகரில், மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளில் ேதவையில்லாமல் மூக்கை நுழைத்து, கமிஷனரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில், என்னை கேட்காமல் எனது வார்டில் பணி எதுவும் செய்யக்கூடாது.. என எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு பேசியுள்ளார். இதனால், கடுப்பாகிப்போன கமிஷனர், ‘‘எனக்கு மக்களும் ஒன்றுதான், கவுன்சிலரும் ஒன்றுதான், மக்களுக்கு எது தேவையோ அதை செய்து கொடுப்பேன்… என்னை யாரும் தடுக்க முடியாது…’’ என அதே வேகத்தில் பதிலடி கொடுத்துள்ளார். வசமாக வாங்கிக்கட்டிய அந்த இலைக்கட்சி கவுன்சிலருக்கு, ஆதரவாக இன்னொரு இலைக்கட்சி கவுன்சிலர் களத்தில் குதித்துள்ளார். அவருக்கும், மாநகராட்சி கமிஷனர், ‘நோஸ்-கட்’ கொடுத்தாராம்… இதனால இலை கட்சியின் இரண்டு கவுன்சிலர்களும் தலைதெறிக்க ஓடியுள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாங்கனி மாவட்டத்தை குறி வைத்துள்ள தாமரை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Mangani ,Yananda ,Salemgarh ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...