
பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் 2வது வார்டு அரியன் வாயல் பகுதியில் தண்ணீர் உப்பு மற்றும் உவர்ப்பு தண்மையுடன் இருப்பதால் பொதுமக்கள் குடிக்க குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சி 2வது வார்டில்) அரியன்வாயல் பகுதி உள்ளது. இங்கு, அபுல் கலாம் ஆசாத் என மூன்று தெருக்கள், ஜெயலட்சுமி நகர், கணேஷ் நகர், இளங்கோ நகர், சண்முகபுரம், ஜெகன் நகர், திருப்பதி நகர், தங்கவேல் புரம் என பத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளன. இங்கு, சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்காக நெய்தவாயல் ஆனைமடுவு ஏரி அருகே கடந்த 3 வருடங்களுக்கு முன்பு 30 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து பைப் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி வழங்கும் தண்ணீரும் உப்பு தண்மை மற்றும் உவர்ப்பு தண்மையுடன் உள்ளது. இதனை குடிக்க பயன்படுத்த முடியாத நிலையில், கடந்த ஒரு மாதங்களாக துணி துவைப்பதற்கும் மற்றும் குளிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால், குடிநீரை டிராக்டர் மூலம் ஒரு குடம் ரூ.7 விலை கொடுத்து வாங்குகின்றனர். மேலும், கேன் தண்ணீர் ரூ.30 வாங்கும் நிலை உள்ளது.
இந்த பகுதி மக்கள் சாதாரண நடுத்தர ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு ரூ..2000 வரை தண்ணீருக்காக செலவு செய்யும் நிலை உள்ளது. இன்னும் இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாகவும் பயன்படுத்தவே முடியாத நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
எனவே, உப்பு மற்றும் உவர்ப்பு தண்மையுடன் வழங்கப்படும் தண்ணீரை சுத்திகரித்து, பயன்படுத்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை வழியுறுத்தி, இந்த வார்டு உறுப்பினர் அபுபக்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி நிர்வாகத்திடமும் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சமூக வளர்ச்சி நிதிகளில், நிதி ஒதுக்கீடு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என அறியன்வாயல் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post மீஞ்சூர் பேரூராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை: ஏழை, எளிய மக்கள் குடிநீர் விலை கொடுத்து வாங்கும் அவநிலை appeared first on Dinakaran.