×

மதிப்புக்கூட்டினால் கத்தான லாபம்… முத்திரை பதிக்கும் முருங்கை விவசாயி

விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்வதை விட, அவற்றை விற்பனை செய்வது மிக முக்கியம். விவசாயத்தில் விற்பனை வாய்ப்பு இல்லையென்றால் நாம் பட்ட பாடு எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தான். விற்பனை வாய்ப்பை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அதை நாமே உருவாக்கலாமே என பல விவசாயிகள் நேரடியாக களம் இறங்கிவிட்டார்கள். அதிலும் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தால், லாபத்தை பல மடங்கில் பார்க்கலாம் என முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த கண்ணையன் தனது 10 ஏக்கர் நிலத்தில் முருங்கையைப் பயிரிட்டு, நல்ல மகசூல் எடுத்து வருகிறார்கள். முருங்கைக்காய்களை நேரடியாக விற்பதோடு, அதை மதிப்புக்கூட்டி சூப் பவுடர், சாதப்பொடி, இட்லி பொடி, முருங்கை லட்டு, பிஸ்கட் என பல பொருட்களை தயாரித்து அசத்தி வருகிறார். முருங்கை வயலில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயி கண்ணையனை சந்தித்தோம். சிரித்தபடியே வரவேற்று பேசத்தொடங்கினார்.

‘‘திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் முருங்கை விவசாயம் கொடிகட்டி பறக்கிறது. இப்பகுதிகளில் 10 ஏக்கர் விவசாய நிலம் இருந்தால் அதில் 5 ஏக்கரில் முருங்கை விவசாயம் கட்டாயம் நடக்கும். நான் சிறுவயதில் இருந்தே முருங்கை விவசாயம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தேன். கடந்த பதினைந்து வருடங்களாக இந்த முருங்கை விவசாயம் தான். முருங்கையைப் பொருத்தவரை காய்களும், இலைகளும்தான் பெருமளவில் விற்பனை ஆகும். ஆனால், அதுவும்கூட சில நாட்களில் விலை இல்லாமல் போகும். தோப்பில் இருந்து முருங்கையை சந்தைக்கு எடுத்துச்செல்ல ஆகும் செலவுக்கு கூட முருங்கை விற்காமல் கிடந்திருக்கிறது. நிரந்தர விலை என்று முருங்கைக்கு ஏதுமில்லை என்பதால் முருங்கையை மதிப்புக்கூட்டி விற்றால் உறுதியான லாபம் பெறலாம் என நினைத்துத் தான் இந்த மதிப்புக்கூட்டலைத் தொடங்கினேன்.

முருங்கையை மதிப்புக்கூட்டுதல் பற்றி ஆர்வமும், அக்கறையும் இருந்தாலும் அதை சரிவர எப்படி செய்வது என்று ஆரம்பத்தில் எனக்கு தெரியவில்லை. இதனால் மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பார்வதி, ஜோதி ஆகியோரோடு சேர்ந்து ஒரு கூட்டுமுயற்சியைத் தொடங்கினோம். முருங்கையை எப்படி மதிப்புக்கூட்டுவது, அதை சந்தைப்படுத்தும் முறை, மதிப்புக்கூட்டலுக்கு தேவையான பொருட்களை எப்படி மானியத்தில் பெறுவது என அனைத்து தரவுகளையும் தெரிந்துகொண்டோம். அதன் அடிப்படையில்தான் இப்போது நல்ல முறையில் மதிப்புக்கூட்டல் செய்து லாபம் பார்த்து வருகிறேன். எனது 10 ஏக்கர் நிலத்தில் நாட்டு முருங்கை, செடி முருங்கை, கரும்பு முருங்கை என மூன்று வகையான முருங்கையைப் பயிரிட்டு இருக்கிறேன். முருங்கையைப் பொருத்தவரை அதன் காய்ப்புத்தன்மைக்கும், இலை விளைச்சல் தன்மைக்கும் சீசன் என்று ஏதுமில்லை. வருடம் முழுவதும் காய்க்கும். சில சமயம் காய்க்காமலும் போகும். ஆனால், முருங்கையை நல்ல முறையில் பராமரித்தால் எல்லா நாளுமே லாபம்தான்.

முருங்கை இலையிலும், முருங்கைக் காய்களிலும் பலதரப்பட்ட மதிப்புக்கூட்டல் செய்யலாம். முருங்கை சூப் பவுடர், சாதப்பொடி, இட்லிபொடி, முருங்கைப்பால், முருங்கை லட்டு, பிஸ்கட் என பலவகையான சத்துமாவுகளும், குழந்தைகளுக்கு தேவையான இனிப்புகளும் தயாரிக்கிறோம். இப்போது வளருகிற குழந்தைகளுக்கு கீரையைப் பற்றிய மகத்துவமோ, அதன் சத்தைப் பற்றிய தெளிவோ தெரிவதில்லை. அதனால் கீரையை நேரடியாக கொடுக்காமல் இந்த மாதிரி மதிப்புக்கூட்டல் பொருட் களின் மூலம் இனிப்பாகவும், எனர்ஜி ட்ரிங்க் ஆகவும் கொடுக்கலாம். 10 கிலோ முருங்கை இலையில் இருந்து 1 கிலோ வரை சூப் பவுடர் தயாரிக்கப்படுகிறது. அதேபோல, முருங்கைக் காய்களில் இருந்து அதன் சதைப்பகுதியை மட்டுமே எடுத்து முருங்கைப்பால் தயாரிக்கப்படுகிறது. முதலில் முருங்கை இலைகளை பறித்து நன்றாக காய வைத்து அது காய்ந்த பிறகு அதனை மதிப்புக்கூட்டல் செய்யப்படுகிறது. காய்களும் அப்படித்தான். காய்களை முதலில் வேகவைத்து, பிறகு 3 நாட்கள் வரை உலர விடுவோம். அதன்பிறகு அதை மதிப்புக்கூட்டலுக்கு பயன்படுத்துவோம். மதிப்புக்கூட்டிய பொருட்களை மக்கள் நேரடியாக எங்களிடம் வாங்கி செல்கிறார்கள். பல இடங்களில் உள்ள ஆர்கானிக் ஸ்டோர்களுக்கு அனுப்பி வைக்கிறோம்.

ஆரம்பத்தில் இதை சாதாரணமாக தொடங்கினேன். இப்போது பெருமளவில் மதிப்புக்கூட்டல் பற்றி அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. பல ஊர்களில் பல இடங்களில் விவசாயிகளுக்கு இந்த மதிப்புக்கூட்டல் பற்றிய பயிற்சிகள் வழங்கி வருகிறேன். கரூர் மாவட்ட கலெக்டர், தனது அலுவலகத்திலேயே எனக்கு தனியாக ஸ்டால் வழங்கி மதிப்புக்கூட்டல் பொருட்களை சந்தைப்படுத்த உதவினார். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மதிப்புக்கூட்டல் பொருட்களைப்பற்றி தெரியப்படுத்த அது உதவியாக இருந்தது. எந்த விவசாயமாக இருந்தாலும் சரி, நேரடி விற்பனையை விட மதிப்புக்கூட்டி விற்கும்போதுதான் அதிக லாபம் கிடைக்கிறது’’ என்கிறார்.

தொடர்புக்கு:
கண்ணையன்: 63827 90381.

The post மதிப்புக்கூட்டினால் கத்தான லாபம்… முத்திரை பதிக்கும் முருங்கை விவசாயி appeared first on Dinakaran.

Tags : Murungai ,Murungu Farmer ,
× RELATED பெரம்பலூரில் ஆயுதபூஜைக்கு பிறகு...