×

சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைப்பு: அமெரிக்கா வெளியுறவுத்துறை கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான்-பிரான்சிஸ்கோவில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. காலிஸ்தான் புலிப்படை தலைவரும், பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜுன் மாதம் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் ஜெனரல் டாக்டர் டி.வி. நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு பங்கு இருப்பதாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோவில், துணை தூதரக வளாகத்தில் எரிபொருளை ஊற்றி ஒரு நபர் தீயிட்டு கொளுத்திய காட்சி வெளியானது. இதனால் அதிவேகமாக பரவிய தீ, பல அடி உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிய அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. கடந்த 5 மாதங்களில் இந்திய துணை தூதரகத்தின் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயலுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

The post சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைப்பு: அமெரிக்கா வெளியுறவுத்துறை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : embassy ,India ,San Francisco ,United States State Department ,Washington ,Indian Deputy Embassy ,San Francisco, USA ,San-Francisco, USA ,Deputy Embassy of India ,US State Department ,
× RELATED காசா தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிய...