×

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

* கண்களை கவருகிறது வண்ணமயமான பந்தல்
* தேருக்கு அலங்காரம் செய்யும் பணி ஜரூர்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவுக்கு இப்போதே நகரம் தயாராகி வருகிறது. கோயிலின் முன் ஆடிப்பூர கொட்டகையில் கண்ணைக் கவரும் அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. தேர் ஜோராக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் இப்போதே புக்கிங் செய்யப்பட்டு ஹவுஸ் புல் ஆகி வருகின்றன. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் ஆண்டாள் கோயில் தேரோட்டம் மிகவும் விமரிசையாக நடக்கும். இதன்படி, இந்த ஆண்டுக்குரிய ஆடிப்பூரம் ஜூலை 22ம் தேதி வருகிறது.

அன்றைய தினம் ஆண்டாள் கோயில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக வரும் 14ம் தேதி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஆண்டாள் கோயில் முன்புறத்தில் உள்ள திரு ஆடிப்பூர கொட்டகையில் தினசரி, தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பரதநாட்டியமும், ஆன்மீக சொற்பொழிவுகளும், பட்டிமன்றங்களும், ஆன்மீக கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆடிப்பூர கொட்டகையில் அமர்ந்து ஆன்மீக நிகழ்ச்சிகளை கண்டு களிப்பர். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்ல இருப்பதால், திரு ஆடிப்பூர கொட்டகையில் உள் அலங்காரங்கள் கண்ணைக் கவரும் வகையில் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி ஆண்டாள், ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நடைபெறும்.

அப்போது பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இதை தொடர்ந்து பல்வேறு மண்டங்களிலும் எழுந்தருளுவர். தேரோட்டம் நடைபெற உள்ளதால் ஆண்டாள் கோயில் தேரை அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தவும், வருகின்ற பக்தர்களுக்கு அனைத்து வசதிகளை செய்து கொடுக்கும் வகையிலும், ஆண்டாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில், தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் தலைமையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. தேரோட்ட திருவிழா 14ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. ஆண்டாள் கோயிலில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கவும், ஆண்டாள், ரெங்க மன்னாரை தரிசிக்கவும் வெளிநாடுகளில் வசிக்கும் திருவில்லிபுத்தூரை சேர்ந்தவர்கள் ஊருக்கு வரத் தொடங்கி விட்டனர்.

தேரோட்டத்தையொட்டி, திருவில்லிபுத்தூரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் முன்பதிவு செய்யப்பட்டு இப்போதே ஹவுஸ் புல் ஆகிவிட்டன. தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும், நகராட்சி சார்பில் செய்து தருவதற்கு, நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் மற்றும் ஆணையாளர் ராஜமாணிக்கம் தீவிர ஏற்பாடு செய்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி திருவில்லிபுத்தூர் களைகட்டத் தொடங்கியுள்ளது.

The post திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரம் தேரோட்ட திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Adipuram chariot ,Andal Temple ,Thiruvilliputhur ,Jharur ,Tiruvilliputhur ,Tiruvilliputhur… ,Adipuram Chariot Festival ,
× RELATED வில்லிபுத்தூரில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா