×

பள்ளிக்கு 8 கி.மீ நடந்தே செல்கிறோம்: புதிதாக பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அருகே பேருந்து வசதி இல்லாமல் 8 கி.மீட்டர் நடந்து அரசு பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர். திருப்புல்லாணி அருகே வெள்ளா மறிச்சுக்கட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் பள்ளி மாணவ,மாணவிகள் செல்ல பேருந்து வசதியும், குடிநீர் வசதியும் ஏற்படுத்தித்தர வேண்டும் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மாணவிகள் கூறும்போது,‘‘எங்கள் கிராமத்தில் தொடக்கக் கல்வியை முடித்தவுடன், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்க 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருஉத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்கிறோம்.

தற்போது இங்கு 30 மாணவ,மாணவிகள் படித்து வருகிறோம். பள்ளிக்குச் சென்று திரும்ப பேருந்து வசதியில்லாததால் நடந்தே சென்று வீடு திரும்புகிறோம். அதனால் தினமும் 8 கி.மீட்டர் தூரம் நடக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு கல்வியை ஒழுங்காக கற்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அடந்த பகுதியாக இருப்பதால் பெண் குழுந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே திருஉத்தரகோசமங்கை அரசு பள்ளிக்குச் செல்ல காலை, மாலை நேரங்களில் பேருந்து இயக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

பெற்றோர் கூறும்போது, ‘‘காலை 7.30 மணிக்கு மட்டும் ராமநாதபுரத்திலிருந்து ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதுவும் வெள்ளா மறிச்சுக்கட்டி கிராமத்திற்கு வந்து ராமநாதபுரத்திற்கு திரும்பி விடும். திருஉத்தரகோசமங்கைக்கு எந்த பேருந்து வசதியும் இல்லை. மாணவ,மாணவிகள் தினமும் புத்தக பையுடன் 4 கி.மீட்டர் தூரம் நடந்து பள்ளி சென்று திரும்புவதால் உடல் சோர்வும், உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. மேலும் எங்கள் கிராமத்தில் குடிநீர் வசதியில்லை. காவிரி குடிநீரும் வருவதில்லை. கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் அசுத்தமான குடிதண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். எனவே கலெக்டர் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதியும், குடிநீர் வசதியும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post பள்ளிக்கு 8 கி.மீ நடந்தே செல்கிறோம்: புதிதாக பஸ் இயக்க மாணவர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Tiruppullani ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே...