×

‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டுபிடிப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி அருகே நம்பியாற்று படுகையில் வாழ்வியல் மேடு காணப்படுகிறது. இங்கு அகழாய்வுப் பணி 2021-ம் ஆண்டு தொடங்கியது. முதற்கட்ட அகழாய்வில் செவ்வண்ணம், கருப்பு சிவப்பு வண்ண மட்கல பானை ஓடுகள், பழந்தமிழர் குறியீடுகள், இரும்பு ஆபரணங்கள், உள்ளிட்ட 1,009 அரிய தொல்லியல் பொருட்கள் கிடைத்தன. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!

திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் ‘புலி’ என்ற தமிழி எழுத்துப்பொறிப்புக் கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதைப் பெருமையுடன் பகிர்ந்திருந்தேன். அதனைத் தொடர்ந்து தற்போது கிடைத்துள்ள பானை ஓடுகளில் ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துப்பொறிப்புகள் கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தகுந்ததாகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச் சமூகம் தனக்கே உரிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ‘திஈய’, ‘திச’, ‘குவிர(ன்)’ ஆகிய தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கண்டுபிடிப்பு : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Dieya ,Tisa ,Kuvira ,Minister Gold South Pradesh ,Tirunelveli ,Tirunelveli district ,Thulukarpatti ,Thulukarbatti ,Diya ,Disha ,Minister Gold South ,India ,
× RELATED என்கவுண்டரில் பலியான 4 பேரும் கால்நடை...