×

பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் சுவாமி பிரமோற்சவ தேர் திருவிழா

சென்னை, ஜூலை 4: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் சுவாமி பிரமோற்சவ தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். கிருஷ்ண பரமாத்மா நின்ற திருக்கோலத்தில் வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமத்துடன், தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத்யும்னன், பேரன் அநிருத்தன், தம்பி சாத்யகி ஆகியோருடன் இக்கோயிலில் சேவை சாதிக்கிறார். உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் குருசேத்திரப் போரில் தன் முகத்தில் ஏந்திய வடுக்களுடன் இங்கு அருள்பாலிக்கிறார். அதுமட்டுமின்றி யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நரசிம்ம பிரமோற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் இரண்டாம் நாள் இரவு சிம்ம வாகனத்தில் உற்சவர் தெள்ளியசிங்கர் அருள்பாலித்தார். மூன்றாம் நாள் கருடசேவை உற்சவமும், நான்காம் நாள் சூரிய, சந்திர பிரபை புறப்பாடும் நடந்தது. விழாவின் ஐந்தாம் நாள், காலையில் பல்லக்கு நாச்சியார் திருக்கோலத்திலும், மாலை யோக நரசிம்மர் கோலத்திலும் பெருமாள் அருள்பாலித்தார். அன்று இரவு, அனுமந்த வாகன புறப்பாடு நடந்தது. ஆறாம் நாள் நேற்றுமுன்தினம் யாளை வாகன புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய தினமான நேற்று காலை தேர் திருவிழா நடைப்பெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர். திருத்தேரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நரசிம்ம சுவாமி அருள் புரிந்தார். தேர் உலா வரும் போது பிரசாதம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

The post பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் சுவாமி பிரமோற்சவ தேர் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Narasimha Swamy Pramotsava Chariot Festival ,Parthasarathi Temple ,Chennai ,Narasimha Swami Brahmotsava Chariot Festival ,Tiruvallikkeni Parthasarathy Temple ,Narasimha Swamy Brahmotsava Chariot Festival ,Parthasarathy Temple ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...