×

மீஞ்சூரில் பரபரப்பு மரக்கடையில் பயங்கர தீ விபத்து:  பல லட்சம் மதிப்பு பொருள்கள் நாசம்  5 மணி நேரம் போராடி தீயணைப்பு

பொன்னேரி, ஜூலை 4: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் பொன்னேரி- திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் தேவ் பட்டேல்(70) என்பவருக்கு சொந்தமான மரக்கடை உள்ளது. இங்கு தேக்கு,கோங்கு உள்ளிட்ட மிக விலை உயர்ந்த மரப்பலகைகளும், கதவு, வாசற்கால், ஜன்னல் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இக்கடையின் மேல் மாடியில் தேவ்பட்டேல் குடும்பத்தாரும் அவருடைய உறவினர்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கடையின் வெளியே, இரும்பு மின் கம்பத்தில், அருகில் உள்ள அரசு மரக்கிளை பட்டு மின் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, அக்கடையில், தீ பற்றி மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலின் பேரில், மீஞ்சூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து 4 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் மேல் மாடியில் இருந்த தேவ்பட்டேல் குடும்பத்தார் மற்றும் அவருடைய உறவினர்களை மீட்டனர்.

பின்னர், சுமார் 5 மணி நேரம் கடுமையாக போராடி, மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில், டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீர் மூலமாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல் ஆகி உள்ளது. தகவல் அறிந்ததும் பொன்னேரி சப் -கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், செயல் அலுவலர் வெற்றிஅரசு, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன் மற்றும் மன்ற வார்டு உறுப்பினர்கள், பொன்னேரி வருவாய் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆவடி சரக போக்குவரத்து உதவி ஆணையர் மலைசாமி மற்றும் மீஞ்சூர் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சரி செய்தனர்

மின் கசிவால் தீ விபத்து
பொன்னேரி, திருவெற்றியூர் நெடுஞ்சாலை, மீஞ்சூர் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. விதிமுறைகள் மீறி மரக்கடை மேல் தளத்தில் வீடு அமைக்கப்பட்டு இருந்தது. தீ ஏற்பட்டால் அதனை அணைக்க தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை. வீட்டு எதிரே சாலை ஓரத்தில் உள்ள அரச மரக்கிளை மின் கம்பியில் உரசி ஏற்கனவே நான்கு முறை தீப்பொறி ஏற்பட்டது. வீட்டுக்கு செல்லும் மின் இணைப்பு இரும்பு கம்பமாக இருப்பதால் இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

The post மீஞ்சூரில் பரபரப்பு மரக்கடையில் பயங்கர தீ விபத்து:  பல லட்சம் மதிப்பு பொருள்கள் நாசம்  5 மணி நேரம் போராடி தீயணைப்பு appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Ponneri ,Dev Patel ,Ponneri-Tiruvettiyur highway ,Meenjoor, Tiruvallur district ,
× RELATED மீஞ்சூர் அருகே பழுதடைந்த சாலைகள் ஆய்வு