×

எலிபேஸ்ட் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து

நாமக்கல், ஜூலை 4: நாமக்கல் மாவட்டத்தில் எலிபேஸ்ட் விற்பனை செய்தால், கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் எலிகளை கொல்ல பயன்படுத்தும் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் மருந்துக்கு, நிரந்தர தடை விதித்துள்ளது. அங்கீகாரம் பெறாத இந்த எலிபேஸ்ட் மருந்துகளை, மன விரக்தியில் இருப்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள சாப்பிடுகிறார்கள். இதில் பலர் பிழைத்து கொண்டாலும், ஆங்காங்கே சில உயிரிழப்பும் நேரிடுகிறது. இதனால், தமிழக அளவில் பூச்சி மருந்து மற்றும் பலசரக்கு கடைகளில், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் கலந்த எலிபேஸ்ட் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் விற்பனைக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கூறியதாவது: தமிழக அரசு 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் (எலிபேஸ்ட்) மருந்துக்கு நிரந்தர தடை விதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பூச்சி மருந்து விற்பனை நிலையங்களிலும், வேளாண்மைத்துறை அதிகாரிகள் கொண்ட குழு சிறப்பு ஆய்வுக்குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மருந்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் ஆகிய இடங்களில், கடை உரிமையாளர்கள் இதை விற்பனை செய்யக்கூடாது. மாவட்டத்தில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள் இவற்றை விற்பனை செய்தால், அவர்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து உரக்கடைகள், பூச்சி மருந்து விற்பனை கடைகளில், வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) செல்வி தலைமையிலான வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, எலிபேஸ்ட் விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள உரக்கடைகளிலும் தொடர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எலி பேஸ்ட் சாப்பிட்டால், அந்த பேஸ்ட் குடலில் ஒட்டிக்கொண்டு, ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடுகிறது. ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், ரத்தம் கசிந்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது. விவசாயிகள் தங்கள் தோட்டங்கள், வீடுகளில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த வாங்கி செல்லும் எலிபேஸ்டுகளை, சில சமயங்களில் மன உளைச்சல், விரக்தியில் மனிதர்கள் சாப்பிடும் நிலை உருவாகி, தற்கொலைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் நோக்கில் எலிபேஸ்ட் விற்பனைக்கு, தமிழக அரசு நிரந்தர தடை விதித்துள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post எலிபேஸ்ட் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Ellipest ,Namakkal ,Elipaste ,Namakkal district ,
× RELATED போட்டியாளர்களுக்கு இலவச பயிற்சி