×

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி சத்தியநாராயணன் ஆணையம் இரு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும் இதுசம்பந்தமாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.அப்போது, மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி, நீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது என்றார்.

இதையடுத்து, ஒரு நபர் ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் கடந்து விட்டதாக கூறிய நீதிபதிகள், விசாரணை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இறுதி வாய்ப்பு தருகிறோம் என்று அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vengaiyal ,Chennai ,Pudukottai District ,Annavasal Panchayat ,Venkaivyal village ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...