×

அஜித் பவார் உள்பட 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு

மும்பை: மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பாஜ அரசில் இணைந்து துணை முதல்வராகவும், அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் உள்ளிட்ட 9 பேர் மீது கட்சித்தாவல் சட்டத்தில் தகுதி நீக்கம் செய்யக்கோரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் நர்வேகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா- பாஜ கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. பின்னர் முதல்வர் பதவியை பாஜ விட்டுத்தராததால், கூட்டணியை விட்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைக்கப்பட்டு, உத்தவ் தாக்கரே முதல்வரானார். பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து வந்து, பாஜவுடன் இணைந்து ஆட்சி அமைத்து முதல்வராகியுள்ளார். துணை முதல்வராக தேவேந்திர பட்நவிஸ் உள்ளார். இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜித்பவார், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேருடன் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் இணைந்தார்.

ராஜ் பவனில் நடந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரமேஷ் பைஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் சகன் புஜ்பால், திலீப் வல்சே பாட்டீல், ஹசன் முஸ்ரிப், தனஞ்சய் முண்டே, அதிதி தட்கரே, தர்மாராவ் அட்ரம், அனில் பாட்டீல், சஞ்சய் பன்சோடே ஆகிய 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஷிண்டே பட்நவிஸ் அரசில் இணைந்துள்ள அஜித்பவார் மற்றும் அவருடன் சென்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு இருப்பதாகவும் இதனால் ஏற்பட்ட நிர்ப்பந்தத்தில்தான் அவர்கள் ஷிண்டே அரசில் இணைந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட அஜித்பவார் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உறுதி அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அஜித்பவார் உள்ளிட்ட 9 பேர் மீதும் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு, தேசியவாத காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித்பவார் அணி மாறியதால், அவருக்கு பதிலாக அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ள ஜிதேந்திர அவாத் இந்த மனுவை சபாநாயகரிடம் சமர்ப்பித்ததாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து, அஜித்பவார் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்களுக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்சிக்கும் தங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுளளது.

மேலும், கட்சி யின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில், ‘‘ 9 எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும், ஏனெனில் இதுபோன்ற கட்சி தாவல்கள் கட்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உறுப்பினர்களாக தொடர அனுமதித்தால், அவர்கள் தொடர்ந்து கட்சியின் நலன்களை சீர்குலைக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சித் தலைவருக்குத் தெரியாமலும், அவரது ஒப்புதல் இல்லாமலும், ரகசியமாக இந்த கட்சி தாவல்கள் நடந்திருப்பது, கட்சியை விட்டு வெளியேறுவதற்கு சமம். இதை கவனத்தில் கொண்டு, கட்சி விதிகளின்படியும், இந்திய அரசியலமைப்பின் 10வது பிரிவின்படியும் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த நடவடிக்கை குறித்து கட்சித் தலைவர் சரத் பவாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டுள்ளது என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

* ‘தேசிய தலைவர் சரத்பவார்தான்’
சரத்பவாரும், அஜித்பவாரும் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து போட்டி அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்க, நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் , கட்சியின் தேசிய தலைவர் யார் என அஜித்பவாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அஜித்பவார், ‘‘கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்தான். அதனை நீங்கள் மறந்து விட்டீர்களா என்ன?’’ என்றார்.

* 35 பேர் ஆதரவு?
ஷிண்டே அரசில் சேர்வதற்கு முன்பாக அஜித்பவார் கூட்டிய கட்சிக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 30 முதல் 40 பேர் பங்கேற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தகவலின்படி, அஜித்பவாருக்கு 35 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. முதற்கட்டமாக 7 பேர் விரைவில் வந்து சேர்வார்கள் என கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். மூன்றில் ஒரு பகுதி எண்ணிக்கையாக 18 பேர் வந்து விட்டாலே கட்சி உடைந்து விட்டதாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

* விரைவில் மற்ற மாநிலங்களிலும்…
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ‘’தன் வினையே தன்னை சுடும் என்பதன் விளைவே இது. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியின் கதை முடிந்து விட்டது. சிவசேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிரிந்து விட்டது. மோடியின் பின்னால் நாடே நிற்கிறது. இனிமேல், மற்ற மாநிலங்களிலும் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பீகாரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் ஒன்று சேர்ந்த ‘தக்பந்தன்’ (தவறு செய்தவர்கள் கூட்டம்). அந்த கூட்டணியில் உள்ள நல்லவர்கள் தேசத்தின் நலன் கருதி அக்கூட்டத்தில் இருந்து வெளியேறி விடுவார்கள்,’’ என்று கூறினார்.

* பிரபுல் படேல் உட்பட 5 பேர் நீக்கம்
அணி மாறிய அஜித்பவார் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்ட சில மணி நேரத்தில், கட்சியின் எம்.பிக்கள் பிரபுல் படேல், சுனில் தட்கரே மற்றும் நரேந்திர ரத்தோட், கட்சியின் அகோலா மாவட்ட தலைவர் விஜய் தேஷ்முக் , சிவாஜிராவ் கர்ஜே ஆகிய 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியானது.

* போட்டி போட்டு நிர்வாகிகள் நியமனம்
சரத்பவார் கட்சி நிர்வாகிகளை நீக்கிய சில மணி நேரத்தில், பிரபுல் படேல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக அஜித்பவார் நியமிக்கப்படுகிறார். அனில் பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொறடாவாக தொடர்வார் என தெரிவித்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா தலைவராக சுனில் தட்கரே தொடர்வார் என்றார்.

The post அஜித் பவார் உள்பட 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் தேசியவாத காங்கிரஸ் மனு appeared first on Dinakaran.

Tags : Ajit Bawar ,Nationalist ,Mumbai ,Nationalist Congress ,Shinde ,Shivasena Baja government ,Maharashtra ,Deputy Chief ,Nationalist congressional ,Dinakaran ,
× RELATED மோடிக்கும், ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: அஜித் பவார் பேச்சு