×

நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று, நாளை மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டத்தில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்து வந்தது. இதனால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை சுற்றுச்சுசூழல் குளிர்ச்சியாகவே காணப்பட்டது. ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கீதா கூறியதாவது: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி. நிண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 6ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 7ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். இன்று தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதே போல் நாளை முதல் 7ம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதே போல் இன்றும், நாளையும் லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை தெற்கில் 10 சென்டி மீட்டர் மழையும், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் 5 செ.மீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* சில்லென மாறிய சென்னை
சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலை பார்க்க முடியாத நிலை காணப்பட்டது. சொல்ல போனால் ஊட்டி போன்று நேற்று முழுவதும் சென்னையில் குளிர்ச்சியான சீதோஷ்ணம் காணப்பட்டது. அவ்வப்போது குளிர் காற்றும் வீசியது. இதனால், சென்னை மக்கள் சந்ேதாஷத்தில் இருந்தனர். வெயிலை மாலை வரை பார்க்க முடியவில்லை. வெயிலில் சிக்கி தவித்த மக்கள் குளிர்ச்சியான சூழலால் சந்தோஷத்துடன் இருந்ததை காண முடிந்தது.

The post நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று, நாளை மிக கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiris, ,Coimbatore ,Theni districts ,Meteorological Department ,Chennai ,South-Eastern Bay of Bengal ,Tamil Nadu ,
× RELATED நீலகிரியில் போக்குகாட்டும் கோடை மழை மலை காய்கறி விவசாயம் பாதிப்பு