×

விதிகளை மீறி டாஸ்மாக் கடைகள் இருந்தால் கலெக்டர்களிடம் முறையிடலாம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் வளசரவாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த கடைகளை மூடாமல் விதிகள் படி அமைக்கப்பட்டிருந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி பகுதிகளில், வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் இருந்து 50 மீட்டர் தூரத்திலும் மற்ற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திலும் மதுபான கடைகள் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல், தங்கள் விருப்பம் போல் மதுக்கடைகளை அரசு மூடியுள்ளது. விதிமீறல் கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, விதிகளை மீறி செயல்படும் மதுக்கடைகளை மூடும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிமீறல் கடைகள் இருந்தால் அவற்றை மூடக் கோரி மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

The post விதிகளை மீறி டாஸ்மாக் கடைகள் இருந்தால் கலெக்டர்களிடம் முறையிடலாம்: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tamil Nadu Govt ,ICourt ,Chennai ,Raja ,Valasaravak ,Chennai High Court ,Tamil Nadu ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED மக்கள் கோரிக்கை தொடர்பாக...