×

திருவண்ணாமலையில் ஆனிமாத பவுர்ணமி: 2வது நாளாக பக்தர்கள் விடியவிடிய கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடியவிடிய 2வது நாளாக இன்றும் கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பஸ், ரயிலில் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் ஆனிமாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.45 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. மேலும், ஆனி மாத பவுர்ணியை குரு பவுர்ணமி என்றும் அழைக்கின்றனர். இந்த நாளில் சந்திரன் மிகப் பிரகாசமாக இருக்கும். மேலும் இந்தநாளில் கிரிவலம் செல்வது கூடுதல் நன்மையை அளிக்கும், ஞானமும், செல்வமும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

எனவே, குரு பவுர்ணமி தினமான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர். மாலை 6 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். எனவே, 14 கி.மீ. கிரிவலப்பாதையும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. 2வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் ெசன்றனர். குரு பவுர்ணமி என்பதால் பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. குறிப்பாக தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகளவு இருந்தது. அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலையில் இருந்தே தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, சிறப்பு கட்டண தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை இன்றும் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனம் மட்டும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டது. இதனால் தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து வெளிபிரகாரம் வரை நீண்டிருந்தது. மேலும், பவுர்ணமியை முன்னிட்டு நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டிருந்தன.

2வது நாளாக இன்றும் நகருக்குள் கார், வேன் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் அனுமதிக்கவில்ைல. எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெங்களூரு, சேலம் வழித்தடத்தில் குறைந்த அளவிலான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கூடுதல் பஸ்களை இயக்கக்கோரி இன்று திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் சமதான பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனே கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பக்தர்கள் மறியலை கைவிட்டனர். அதேபோல் ரயில் நிலையத்திலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ரயிலில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்துக்கொண்டனர். இதனால் குழந்தைகளுடன் வந்த பெண்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

The post திருவண்ணாமலையில் ஆனிமாத பவுர்ணமி: 2வது நாளாக பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Krivalam ,Ani month ,Annamalaiyar Temple… ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து...