×

செங்கல்பட்டு அருகே புதிய பேருந்து நிலைய இடத்தை அமைச்சர்கள் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி நகரில் 14 ஏக்கர் பரப்பளவில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் ₹40 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை இன்று காலை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கு குடியிருப்புகளை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வில் அதிகாரிகள் அபூர்வா, அன்சுல் மிஸ்ரா, கலெக்டர் ராகுல்நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: தற்போது செங்கல்பட்டு நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இந்நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு, ஆலப்பாக்கம் ஊராட்சியில் ₹40 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஆலப்பாக்கம் ஊராட்சியில் சிஎம்டிஏ குழுமம் சார்பில் அமையவிருக்கும் புதிய நவீன பேருந்து நிலையத்தில் 46 பேருந்துகளும், பணிமனையில் 67 பேருந்துகள் நின்று செல்லும் வசதி ஏற்படுத்தப்படும். மேலும், பேருந்து நிலைய வளாகத்துக்குள் உருவாகும் கார் பார்க்கிங் பகுதியில் 67 கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் 782 இருசக்கர வாகனங்கள் நிற்கும் வகையிலும், வணிக வளாகத்தில் 30 கடைகள் கட்டப்படும்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆட்சியில் திட்டமிடாமல் கட்டப்பட்டு உள்ளது. தற்போது அங்குள்ள குறைகள் சீரமைக்கப்பட்டு, புதிய நவீன பேருந்து நிலைய பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனினும், அங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அணுகுசாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அங்கு காவல் நிலையம், மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கு மழைநீர் வெளியேற கால்வாய்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகள் முடிந்ததும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதற்கிடையே ஆலப்பாக்கம் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமையவிருக்கும் இடத்தில், ஏற்கெனவே அங்கு வசித்து வரும் பொதுமக்களின் 53 குடியிருப்புகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, மதுராந்தகம்-செங்கல்பட்டு சாலையில் 53 குடும்பத்தினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்களிடம் செங்கல்பட்டு தாசில்தார் தனலட்சுமி மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம், உங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர். எனினும், அப்பகுதி மக்கள் ஏற்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு டிஎஸ்பி பரத் தலைமையில் போலீசார், மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

The post செங்கல்பட்டு அருகே புதிய பேருந்து நிலைய இடத்தை அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu District Collector's Office ,VUC Nagar ,Alappakkam Panchayat, Chennai ,
× RELATED செங்கல்பட்டு வட்டாட்சியர்...