×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்: ஆக்கிரமிப்பை அகற்றினால் விவசாயம் பெருக வாய்ப்பு

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள், நீர்வரத்து ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி நீர்வரத்து ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 543 ஏக்கர் பரப்பளவில் சாந்தநேரி, பரமசிவன் கோயில் கண்மாய், பெரியகுளம், சிறுகுளம், உள்ளிட்ட 12 கண்மாய்கள் உள்ளது. இதில் ஓட்டணை, பெரியகுளம், சிறுகுளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் இந்த கண்மாய்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும், இந்த கண்மாய்களுக்கு மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மழை பெய்து ஆறு மற்றும் அருவியில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் கண்மாய்களில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கண்மாய்க்கு அமைக்கப்பட்டுள்ள வரத்து வாய்க்கால்களில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக வரத்து வாய்க்கால் முழுவதும் மரம் செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் கண்மாய்களுக்கு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டாலும் அது கண்மாய்களுக்கு செல்லுவதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக மூல வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து காணப்படுகிறது.

இதில் 5 க்கும் மேற்பட்ட முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது சாரல்மழை தொடங்கியுள்ள நிலையில் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் வெயில் காலம் தொடங்கிய பின்பு மழை பெய்ய வாய்ப்புகள் மிக குறைவு. பொதுவாக கோடை காலங்களில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயமும் பாதிக்கப்படும். கண்டமனூர் கிராமத்தில் பரமசிவன் கோயில் கண்மாய் உள்ளது. கடந்த ஆண்டு கண்டமனூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கண்மாயில் முழு கொள்ளளவில் நீர் தேங்கி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாததால் கண்மாயில் தொடர்ந்து நீர் குறைந்து கொண்டே வருகிறது. இதையடுத்து கண்டமனூர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பரமசிவன் கோயில் கண்மாயில் நீர்வரத்து மிகவும் வற்றிக் கொண்டே செல்கிறது. இதனால் கால்நடைகள் தண்ணீர் குடிக்க மிகவும் சிரமப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை பெய்யும் நேரங்களில் கண்மாய்களின் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடந்த ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை.

ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. அதுபோல், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள நீர்நிலைளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும், என்றனர்.

தனிநபர்களின் ஆக்கிரமிப்பு அதிகம்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் பெரும்பாலானவை தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் காணப்பட்டது. 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாந்தநேரி, 109 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும்பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். கண்மாய்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வருசநாடு பகுதி விவசாயிகள் ஒருங்கிணைந்து குழு அமைத்து அதன் மூலம் கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் வாயிலாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அதன் விளைவாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியகுளம், சாந்தநேரி, பஞ்சம்தாங்கி ஆகிய கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். முதற்கட்டமாக கண்மாய் அளவீடு செய்யப்பட்டு கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெரியகுளம், பஞ்சம்தாங்கி கண்மாய்களில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தென்னை மற்றும் இலவம் மரங்கள் அகற்றப்பட்டது. இதேபோல் புதுக்குளம் கண்மாயை முறையாக பராமரிப்பு செய்து தனி நபர் ஆக்கிரமிப்பு அகற்றி கறைகளை பலப்படுத்த வேண்டும் மாறு செய்தால் வீடுகளுக்கும் விவசாயிகளுக்கும் நிலத்தடி நீர்மட்டம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய், நீர்வரத்து ஓடைகளை தூர்வார வேண்டும்: ஆக்கிரமிப்பை அகற்றினால் விவசாயம் பெருக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Kadamalai-Mayilai union ,Varusanadu ,Kadamalai-Milai union ,
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாயில்...