×

மயிலாடும்பாறை கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

வருசநாடு: மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் முழுவதும் காணும் இடமெல்லாம் அதிக எண்ணிக்கையில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்களால் உருவாகும் ரேபிஸ் எனும் மிகக்கொடிய வைரஸ் தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் மிக கடுமையானதாக இருக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடிப்பதால் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று ஏற்படும். ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாயால் கடிபட்ட மனிதர்களை தனிக்கூண்டில் அடைத்து வைத்து சிகிச்சை அளிப்பர். இருப்பினும் அவர்கள் அந்த நோய் பாதிப்பில் இருந்து மீள்வது கேள்விக்குறியாகவே உள்ளது.

பொதுவாக ரேபிஸ் பாதிக்கப்பட்டுள்ள நாய் கடித்தால் மட்டுமே நோய் பரவும் என்றில்லை. பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் பட்டாலும், நகத்தால் கீறினாலும் ரேபிஸ் தொற்று பரவலாம். நம் உடலில் சிறுகீறல் இருந்து அதில் ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாயின் உமிழ்நீர் பட்டாலும் வைரஸ் தாக்கும். இவ்வளவு மோசமான பின் விளைவுகளை தரக்கூடிய ரேபிஸ் நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள எந்த நாய் கடித்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் பலரும் இதில் கவனம் செலுத்துவதில்லை. நாய் லேசாகத்தான் கடித்தது என பாதிப்பின் நிலை உணராமல் இருந்துவிட்டால் அவர்கள் குடும்பத்தினரே அவர்களை ஒதுக்கிவைக்கும் நிலை ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை.

மிக ஆபத்தான ரேபிஸ் பரவலுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தெரு நாய்கள். இவற்றை கட்டுப்படுத்த எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும் பலன் அளிக்காலேயே உள்ளன. கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. பகல் நேரங்களில் நாய்கள் தேனி-வருசநாடு சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர்.மேலும் நாய்கள் அடிக்கடி சாலையை கடப்பதால் டூவீலர், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடும்பாறை கிராமத்தில் தெருநாய் ஒன்றுக்கு வெறி பிடித்து 10க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்தது. மேலும் 2 பசு மாடுகளையும் கடித்தது. இதுபோன்று நாய்களுக்கு வெறி பிடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் இடையே தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மயிலாடும்பாறை கிராமத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியாக குழு அமைக்க வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் குழு அமைக்க வேண்டும். அந்த குழுவினர் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது, தடுப்பூசி செலுத்துவது போன்ற பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த தகவல்களை மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு தெரு நாய்களின் அச்சமின்றி பொதுமக்கள் நடமாட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.’’ என்றனர்.

The post மயிலாடும்பாறை கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Mayiladumparai ,Varusanadu ,
× RELATED தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை