×

குமுளி மலைச்சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

கூடலூர்: குமுளி மலைச்சாலையில் கீழே விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வனத்துறைக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் தமிழக, கேரள எல்லைப் பகுதியான குமுளியானது தேனி&கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பிலிருந்து 6 கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மலைச் சாலையில் செல்கிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்வதற்கு கம்பம்மெட்டு, போடி மெட்டு, குமுளி என 3 வழித்தடங்கள் இருந்தாலும் கேரளா செல்லும் பயணியர் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் குமுளி மலைச்சாலை வழியே செல்கிறது.

மேலும் குமுளி மாநில எல்லை என்பதால் நீண்ட தொலைவிலிருந்து இயக்கபடும் பயணியர் பஸ்களும், கம்பம் பள்ளத்தக்கு பகுதியிலிருந்து இடுக்கி மாவட்ட ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்குச்செல்லும் தொழிலாளர்களின் நூற்றுக்கணக்கான வாகனங்களும் இவ்வழியே செல்கிறது. இதனால் குமுளி மலைச்சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இதில் லோயர் கேம்ப் முதல் குமுளி வரை உள்ள மலைச்சாலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சாலையின் இருபுறமும் அதிக அளவில் பலவகை மரங்கள் உள்ளன. இதில் பல மரங்கள் காய்ந்து போய் கீழே விழும் நிலையிலும், ஆங்காங்கே மண்சரிவினால் பல மரங்கள் பலமிழந்து கீழே விழும் நிலையிலும் உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் இடுக்கி மாவட்டத்தில் மழை தொடங்கி உள்ளது. இதனால் குமுளி மலைச்சாலையிலும் சாரல் மழை தொடங்கி உள்ளது. மழை வலுப்பெற்றால், மண்சரிவினால் பலமிழந்து நிற்கும் பல மரங்கள் சாலையில் விழுந்து விபத்து ஏற்படக்கூடும். எனவே பயணிகள் மற்றும் டிரைவர்கள் பாதுகாப்பு கருதி குமுளி மலைச்சாலையில் கீழே விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்கள் அகற்ற டிரைவர்கள் வனத்துறைக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், ‘‘மழை தொடங்கினால் குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்படுவது வழக்கம், ஏற்கனவே மண்சரிவினால் சாலையோரத்தில் பலமரங்கள் வேர்பலமின்றி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த மரங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் அபாயம் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.’’ என்றனர்.

The post குமுளி மலைச்சாலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kumuli Hill Road ,Kumuli highway ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...