×

பேர்ஸ்டோ ரன் அவுட் முற்றிலும் நியாயமானது: கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

லண்டன்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடரில் 2வது டெஸ்ட்லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸி. 416, இங்கிலாந்து 325 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஆஸி. 279 ரன்னுக்கு ஆல்அவுட் ஆக 371 ரன் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து கடைசிநாளான நேற்று 327ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 43 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. வெற்றிக்கு பின் ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது: ”இன்னொரு அற்புதமான விளையாட்டு. இதயம் துடிப்பதை நிறுத்தும் தருணங்கள் இருந்தன. கூட்டம் இதை ரசித்ததாகத் தோன்றியது. ஸ்டோக்ஸ் உலகத் தரம் வாய்ந்த வீரர். இவர் களத்தில் இருந்த வரை வெற்றிபெறமுடியும் என நினைக்கவில்லை. பிட்ச் பந்து வீச்சுக்கு கடினமாக இருந்தது. விதிமுறைப்படி பேர்ஸ்டோ ரன்அவுட் முற்றிலும் நியாயமானது. அப்படி தான் நான் பார்த்தேன். நாதன் லயன் இல்லாமல் வெற்றி பெறுவது மிகப்பெரியது. அவர் காயத்துடன் பேட் செய்தபோது நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை.

இருப்பினும் அவர் ஆர்வத்துடன் களம் இறங்கினார். கடைசியில் கிடைத்த அந்த 15 ரன் முக்கியமானதாக தோன்றியது, என்றார். 52வது ஓவரின் கடைசி பந்தை கேமரூன் கிரீன் பவுன்சராக வீசிய நிலையில் குனிந்துகொண்டு பேர்ஸ்டோ விட்டுவிட்டார். அடுத்த சில நொடிகளில் அவர் கிரீசை விட்டு வெளியேறிய நிலையில் பந்தை பிடித்த விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டெம்பை நோக்கி வீசி தகர்த்தார். இதனால் ஆஸி. ரன்அவுட் கேட்க, 3வது நடுவர், கள நடுவர் ஓவர் முடிந்ததாக சிக்னல் கொடுக்கும்முன் பேர்ஸ்டோ வெளியேறியதால் ரன்அவுட் என அறிவித்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த வெற்றிமூலம் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்க 3வது டெஸ்ட் வரும் 6ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

தோல்வி வருத்தம் அளிக்கிறது

2வது இன்னிங்சில் வெற்றிக்காக போராடி 155 ரன் எடுத்து அவுட் ஆன இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: ஹெட்டிங்லே மைதானத்தில் செய்ததைப் போலவே இங்கேயும் செய்ய நினைத்தேன்.
கடைசியில் முடிக்க முடியாமல் போனது சற்று வருத்தத்தை கொடுக்கிறது. அதற்குள் ஆஸ்திரேலியா தங்களது திட்டங்களை மாற்றி விட்டார்கள். ஆகையால் நானும் அதற்கேற்றார் போல் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நேரங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது.

இவ்வளவு தூரம் போராடியும் தோல்வியைத் தழுவியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்காக தலைகுனிய தேவையில்லை. இன்னும் 3 போட்டி உள்ளது. எங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது, என்றார். பேர்ஸ்டோ ரன் அவுட் பற்றிய கேள்விக்கு, அது ரன்அவுட் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வகையில் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமா என்றால் இல்லை என்பதே எனது பதில் என்றார்.

The post பேர்ஸ்டோ ரன் அவுட் முற்றிலும் நியாயமானது: கேப்டன் கம்மின்ஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Bairstow ,Captain Cummins ,London ,Ashes ,England ,Australia ,Testlords Stadium ,Aussie ,England… ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை