×

குரு பவுர்ணமியொட்டி 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் 2ம் நாளாக திரண்ட பக்தர்கள்: 23 கி.மீ. சுற்றி கிரிவலம் வந்தனர்

கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை கோயிலில் இரண்டாவது நாளாக குரு பவுர்ணமியொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கலசபாக்கம் அருகே தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வத மலை மீது சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்பாள் சமேத மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்ய தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.  அவ்வாறு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு செல்லும் அபிஷேக பொருட்கள் மூலம் சுவாமிக்கு தங்களது கையாலேயே அபிஷேகம் செய்யலாம். இந்நிலையில், நேற்று முன்தினம் சனி பிரதோஷம் நேற்று ஆனி மாத குரு பவுர்ணமி என்பதால் நேற்று அதிகாலை கோயில் மாதி மங்கலத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர், கடலாடி பட்டியந்தல் வேடப்புலி வெள்ளந்தாங்கீஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக சுமார் 23 கிலோமீட்டர் பர்வதமலை சுற்றி கிரிவலம் வந்தனர். பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் தங்களது கைகளில் சக்தி கயிறு கட்டிக் கொண்டு மலை உச்சிக்கு சென்று மல்லிகா அர்ஜுனேஸ்வரரை தரிசனம் செய்தனர். நேற்று வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்து பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மேலும், மலையடிவாரத்தில் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் மலையேறும் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா என சோதனை செய்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் கடன் தீரும் என்ற நம்பிக்கையால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அதேபோல் குரு பவுர்ணமியில் கிரிவலம் வந்து வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஏராளமான பெண்கள் கிரிவலம் வந்தனர். மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post குரு பவுர்ணமியொட்டி 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் 2ம் நாளாக திரண்ட பக்தர்கள்: 23 கி.மீ. சுற்றி கிரிவலம் வந்தனர் appeared first on Dinakaran.

Tags : Parvadamalai ,Guru Poorna ,Krivalam ,Kalasapakkam ,Parvathamalai temple ,Guru Poorna.… ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்