×

நிலக்கோட்டை நால்ரோட்டில் ஸ்தம்பிக்கும் வாகனங்கள்; சாலையோரம் நிறுத்தப்படும் டூவீலர்களால் ‘டிராபிக் ஜாம்’- நிரந்தர போக்குவரத்து காவலர்களை நியமிக்க கோரிக்கை

நிலக்கோட்டை: நிலக்கோட்டை நால்ரோட்டில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று. இந்த நிலக்கோட்டை 150க்கும் மேற்பட்ட கிராமங்களின் தலைமை நகராகவும், நகரின் மையத்தில் இதயம் போன்று செயல்படும் ஒருங்கிணைந்த தாலுகா அலுவலகம் உட்பட அரசு வளாகங்கள், பத்திரப்பதிவு அலுவலகம், மகளிர் சிறைச்சாலை, நீதிமன்ற வளாகம், பேரூராட்சி அலுவலகம், பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட், தினசரி காய்கறி சந்தை மற்றும் வாரச்சந்தை, முக்கிய கடைவீதி பகுதிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.

மேலும் இதே நிலக்கோட்டையை சுற்றி பூ காய்கனி, பழங்கள் உட்பட தினசரி வியாபாரம் செய்யக்கூடிய விவசாயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுவதால், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கும், தங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்வதற்கும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலர்கள் பணியாளர்கள் மதுரை,திண்டுக்கல், தேனி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருவதற்கு முக்கிய போக்குவரத்து நகராகவும் உள்ளது. இதனால் சமீப காலமாக கனரக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் மதுரை-வத்தலக்குண்டு சாலை, செம்பட்டி-அணைப்பட்டி சாலை உட்பட நான்கு சாலைகள் சந்திக்கும் நால்ரோடு பகுதியில் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.

இதனால் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் பேருந்துகள் போக்குவரத்து நெரிசல் சிக்கி பல மணி நேரம் ஆவதால் சரியான நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து தடையை சரி செய்ய நிரந்தர போக்குவரத்து காவலர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயியான செல்லமணி கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மிக வேகமாக வளர் ந்து வரும் நகரங்களில் ஒன்று.

திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலைகள் சந்திக்கும் நால்ரோடு பகுதியில் உள்ள வணி க வளாகம் மற்றும் அலுவலகங்களின் முன் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் டூவீலர்கள் மற்றும் வணிக வளாகங்களின் பெயர் பலகைகளால் குறுகிய பகுதியில் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சமீப காலமாக இப்போகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதால் குறுகிய சாலையில் செல்ல முடியாமல் அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்பட்டு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக காலை மாலை நேரங்களில் சுற்றுவட்டார விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யப்பட்ட பூக்கள் மற்றும் காய்கறிகளை வியாபாரம் செய்யவருவதாலும், அதே நேரத்தில் பள்ளி கல்லூரி மாணவிகள் அலுவலர்கள் செல்லும் நேரம் என்பதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் காத்திருக்கவும் போக்குவரத்து நெருசலில் சிக்கிக் கொள்ளும் அவல நிலையும் ஏற்படுகிறது.

எனவே மிக வேகமாக வளர்ந்து வரும் நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு முதன்மை காரணமாக உள்ள வணிக வளாகங்கள் முன் நிறுத்தப்படும் டூவீலர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற வேண்டும். நிரந்தர போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்து சரி செய்ய வேண்டும். மேலும் கனரக வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும் இதே நிலை நீடிக்கும் என்பதாலும் நிலக்கோட்டையில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்றார்.

The post நிலக்கோட்டை நால்ரோட்டில் ஸ்தம்பிக்கும் வாகனங்கள்; சாலையோரம் நிறுத்தப்படும் டூவீலர்களால் ‘டிராபிக் ஜாம்’- நிரந்தர போக்குவரத்து காவலர்களை நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilakottai Nal Road ,Nilakottai ,Dinakaran ,
× RELATED மரக்கன்றுகள் நடல்