×

சிறுவன் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தொடரும் வன்முறையால் பிரான்சில் பதற்றம்: மேலும் 720 பேர் கைது

பாரிஸ்: பிரான்சில் சிறுவன் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தொடரும் வன்முறையால் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர்ப் பகுதியாக நான்டெரில் நிஹல் மெர்டோவ்ஸ்(17) சிறுவன் தனது தாயார் மவ்நியாவுடன் வசித்து வந்தான். ஒரு கடையில் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்த நிஹல் கடந்தவாரம் செவ்வாய்க்கிழமை இரவு காரில் சென்றபோது போக்குவரத்து காவலரால் சுட்டு கொல்லப்பட்டான். அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட சிறுவன் காவலரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வௌியாகி நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டக்காரர்கள் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. தலைநகர் பாரீஸ், லியோன், மார்சேய், நைஸ், ஸ்டார்ஸ்போர்க் உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சாலை தடுப்புகள், குப்பை தொட்டிகள், டயர்கள் ஆகியவற்றை அடித்து, நொறுக்கி தீ வைத்து எரித்தனர். தொடர்ந்து 5வது நாளாக நடந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்கள், ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியதில் ஏராளமான காவலர்கள் காயமடைந்தனர்.

பதிலுக்கு பீரங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்கள் கலைக்கப்பட்டனர். தலைநகர் பாரிசீன் தெற்குப்பகுதியில் ஹே லெஸ் ரோசஸ் என்ற மாகாண மேயர் வின்சென்ட் ஜேன்ப்ரன் வீட்டை வன்முறையாளர்கள் முற்றுகையிட்டனர். வீட்டின் மீது எரியும் காரை மோதியதில் வீட்டுக்குள் இருந்த மேயரின் மனைவியும், ஒரு குழந்தையும் காயம் அடைந்தனர். பிரான்ஸ் முழுவதும் நேற்று வன்முறையில் ஈடுபட்ட மேலும் 720 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 2,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடரும் வன்முறை சம்பவங்களால் பிரான்ஸ் பற்றி எரிவதால் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

The post சிறுவன் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து தொடரும் வன்முறையால் பிரான்சில் பதற்றம்: மேலும் 720 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : France ,Paris ,President ,Emmanuel Macron ,Dinakaran ,
× RELATED பிரான்ஸ் பல்கலை.யில் இருந்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெளியேற்றம்