×

சூப்பர் 6 சுற்று லீக் ஆட்டம்: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

புலவாயோ: உலக கோப்பை தகுதிச்சுற்று சூப்பர் 6 லீக் ஆட்டத்தில், இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச… ஜிம்பாப்வே 32.2 ஓவரில் 165 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. ஷான் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 56 ரன், சிக்கந்தர் 31, பர்ல் 16, கேப்டன் எர்வின், பிராட் எவன்ஸ் தலா 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இலங்கை பந்துவீச்சில் மகீஷ் திக்‌ஷனா 4, மதுஷங்கா 3, பதிரணா 2, ஷனகா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா – கருணரத்னே முதல் விக்கெட்டுக்கு 19.5 ஓவரில் 103 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். கருணரத்னே 30 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 33.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நிசங்கா 101 ரன் (102 பந்து, 14 பவுண்டரி), குசால் மெண்டிஸ் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தீக்‌ஷனா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

* உலக கோப்பைக்கு இலங்கை தகுதி

சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வே அணியை நேற்று வீழ்த்திய இலங்கை அணி, இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட தகுதி பெற்றது. சூப்பர் 6 சுற்றில் அந்த அணி 8 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 2வது இடம் பிடித்து உலக கோப்பைக்கு தகுதி பெறப் போகும் 2வது அணி எது என்பதில் ஜிம்பாப்வே (6 புள்ளி), ஸ்காட்லாந்து (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் நாளை மோத உள்ள சூப்பர் 6 லீக் ஆட்டம் இதை முடிவு செய்யும்.

The post சூப்பர் 6 சுற்று லீக் ஆட்டம்: 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை appeared first on Dinakaran.

Tags : Super 6 round league ,Sri Lanka ,Zimbabwe ,Bulawayo ,World Cup Qualifier Super 6 League ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...