×

புதுச்சேரியை கலக்கும் மது விளம்பரம் பெண்களுக்கு சரக்கு இலவசம்… ஒன்று வாங்கினால் ஒன்று பிரீ…கண்டனம் எழுந்ததால் கலால்துறை கடும் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான விற்பனை குறித்து சமூக வலைதளத்தில் வெளியாகிவரும் தகவல்களை உடனடியாக நீக்க வேண்டுமென கலால்துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மதுபானம் விற்பனை மட்டுமே அரசுக்கு பிரதான வருமானமாக உள்ளது. இத்துறையை முதல்வர் ரங்கசாமி கவனித்து வருகிறார். தனியார் ஆதிக்கம் இங்கு அதிகம் என்பதால் விற்பனையை அதிகரிக்க பல்வேறு விதமாக விளம்பரங்களை சமூக வலைதளங்களில் செய்கின்றனர். இதில் உச்சக்கட்டமாக பெண்களுக்கு மது இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தது.

இதையடுத்து, மதுவிற்பனை விளம்பரத்துக்கு கலால் துறை தடை விதித்து உள்ளது. இதுகுறித்து கலால்துறை பறக்கும்படை தாசில்தார் சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி கலால் துறையில், மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், 2 வாங்கினால் ஒன்று பிரீ பெண்களுக்கு மது இலவசம், மது வாங்கினால் பரிசு பொருள்கள் இலவசம் போன்றவற்றை குறித்த விளம்பர பதாகைகள் சுவரொட்டிகள் வைத்துள்ளதாக தெரியவருகிறது.

மேற்கூறிய மதுபானம் விற்பனை சலுகைகள் சம்பந்தமான பதாகைகள், சுவரொட்டிகள், நாளேடுகளில் வெளியிடுதல், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த விதத்திலாவது தகவல் பரப்புதல் புதுச்சேரி கலால் விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்கூறிய மதுபான விற்பனை உரிமை பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள், விடுதிகள், சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை உடனடியாக நீக்கும்படி எச்சரிக்கப்படுகின்றது.இதுதொடர்பான விதி மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post புதுச்சேரியை கலக்கும் மது விளம்பரம் பெண்களுக்கு சரக்கு இலவசம்… ஒன்று வாங்கினால் ஒன்று பிரீ…கண்டனம் எழுந்ததால் கலால்துறை கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Department of Excise ,Excise Department ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை