×

அயோத்திகுப்பம் வீரமணியின் கூட்டாளியை கொன்ற ரவுடி புல்லட் குமரன் உயிரிழப்பு: போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம்

சென்னை: மார்க்கெட் முரளியை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடி புல்லட் குமரன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால்போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை ஜாம்பஜார் புலிபோன் பஜார் பகுதியை சேர்ந்தவர் புல்லட் குமரன்(53). அதிமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார். மேலும், பிரபல ரவுடி அயோத்திகுப்பம் வீரமணிக்கு, நெருக்கமாக இருந்தவர்களில் புல்லட் குமரனும் ஒருவர். அயோத்திகுப்பம் வீரமணியை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதனால் பயந்துபோன வீரமணியின் கூட்டாளிகள் போலீசாரிடம் நாங்கள் திருந்தி வாழ்வதாக எழு்திகொடுத்தனர்.

இதற்கிடையே மார்க்கெட் முரளி தனது திறமையால் ஜாம்பஜார் பகுதியில் காய்கறி கடைகள் மற்றும் 4 இறைச்சிகடைகள், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வசதியாக வாழ்ந்து வந்தார். மார்க்கெட் முரளியின் வளர்ச்சி ரவுடி புல்லட் குமரனுக்கு பிடிக்கவில்லை. இருவரும் அயோத்திகுப்பம் வீரமணியுடன் ஒன்றாக பணியாற்றிய நிலையில், மார்க்கெட் முரளிக்கு மட்டும் இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று புல்லட்குமரன் சந்தேகப்பட்டார். இதையடுத்து நண்பர்களான இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். இதற்கிடையே, 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாம்பஜார் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் திருவிழாவை மார்க்கெட் முரளி முன்நின்று நடத்தி வந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே மார்க்கெட் முரளி மீது கடும் கோபத்தில் இருந்த புல்லட் குமரன், அவரை தன் வீட்டிற்குள் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்றார். பின்னர், தனது 4 மகன்களுடன் தயாராக வைத்திருந்த ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இந்நிலையில் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய புல்லட் குமரன் நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். பிரபல ரவுடி இறந்ததால் ஜாம்பஜார் பகுதியில் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் ரவுடி புல்லட் குமரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

The post அயோத்திகுப்பம் வீரமணியின் கூட்டாளியை கொன்ற ரவுடி புல்லட் குமரன் உயிரிழப்பு: போலீஸ் பாதுகாப்புடன் உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Tags : Ayodhikuppam Veeramani ,Bullet Kumaran ,Chennai ,Market Murali ,Kumaran ,Dinakaran ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்