×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பெண்மையை போற்றும் வகையில் ‘கலைஞர் எழுதுகோல் விருது’: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி இந்தாண்டு பெண்மையை போற்றும் வகையில் பெண் இதழியலாளருக்கு கூடுதலாக ஒரு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க ஆணை வெளியிடப்பட்டு அதன்படி கடந்தாண்டு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்க தகுதியான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெண்மையைப் போற்றுகின்ற வகையில் இந்தாண்டு மட்டும் ஒரு பெண் இதழியலாளருக்கு கூடுதலாக ஒரு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கி கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்தவகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கலைஞர் எழுதுகோல் விருது – 2022ம் ஆண்டிற்கான ஏற்கனவே பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுடன், கூடுதல் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. மேலும், கலைஞர் எழுதுகோல் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகின்றன.
அதன்படி விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:

* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும்.

* பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்

* இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்

* விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்

* விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

* இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. “கலைஞர் எழுதுகோல் விருது 2022” மற்றும் பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ஆகியவற்றிற்கான தகுதியான விண்ணப்பங்கள், விரிவான சுய விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு இம்மாதம் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பெண்மையை போற்றும் வகையில் ‘கலைஞர் எழுதுகோல் விருது’: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Admire Feminism ,Artist Centenary Festival ,Tamil Nadu Government ,Chennai ,India ,Artist Century Festival ,Feminism ,
× RELATED ராஜா அண்ணாமலை மன்றத்தில் நாளை காலை கலைஞர் நூற்றாண்டு நிறைவு