
புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் செய்யவும், தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கட்சி அமைப்பிலும் முக்கிய மாற்றங்கள் செய்யவும் பாஜ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி கடந்த 28ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா ஆகியோருடன் முக்கிய சந்திப்பை நிகழ்த்தினார்.
இதில் கட்சி அமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஒன்றிய அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. வரும் 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க உள்ளதால் அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர, மகாராஷ்டிரா அரசியலில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார், பாஜ கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு நெருக்கமானவரான மூத்த தலைவர் பிரபுல் படேல், அஜித் பவாருடன் கைகோர்த்துள்ளார். இதனால் பிரபுல் படேலுக்கு முக்கிய பொறுப்பு தரும் வகையில், அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படலாம் என கூறப்படுகிறது. இதே போல, அஜித் பவார் வருகையில், மகாராஷ்டிராவில் ஏற்கனவே துணை முதல்வராக உள்ள பாஜ முக்கிய தலைவர் தேவேந்திர பட்நவிஸ், அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.
மேலும் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால், இதுவே பாஜ அரசின் கடைசி அமைச்சரவை மாற்றமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கர்நாடகாவில் ஆட்சியை பறிகொடுத்ததால், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களுக்கு பாஜ அதிக முக்கியத்துவம் தருகிறது. எனவே, அங்கு கட்சியை பலப்படுத்தவும் இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post ஒன்றிய அமைச்சரவையில் மாற்றம் பிரதமர் தலைமையில் இன்று முக்கிய முடிவு: பிரபுல் படேல் பட்நவிசுக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.