×

ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அண்ணாமலையார் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பவுர்ணமி நாளில் ரூ.50 கட்டண தரிசன முறை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திகழ்கிறது.

இக்கோயிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத்திருநாளன்றும், சித்ரா பவுர்ணமி நாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்றிரவு 7.45 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது என்று கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, கோபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பத்கர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், குரு பவுர்ணமி என்பதாலும் பக்தர்களின் வருகை அதிகரித்தது. கோயிலில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பலர் காலையிலேயே கிரிவலம் சென்றனர். பவுணர்மி இரவு தொடங்குவதால் மாலையில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும். குரு பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பத்கர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களின்போது மட்டும் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும். பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பவுர்ணமி நாட்களின்போது ரூ.50 தரிசன டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டு அனைத்து பக்தர்களும் பொது தரிசனம் வழியாக விரைவாக சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி பவுர்ணமி நாளான இன்று ரூ.50 தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.

அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசையில் அனுமதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. மற்ற நாட்களில் வழக்கம்போல் பொது தரிசனம், ரூ.50 கட்டண தரிசனம், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவற்றில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.50 கட்டண தரிசன முறை ரத்து; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் அலைமோதல்: திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் appeared first on Dinakaran.

Tags : Annamalayar Temple ,Thiruvanamalaya ,Tiruvannamalai ,Aani ,Anamalayar ,Pournami Grivalam ,Thiruvanamalai ,
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...