×

எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சிக்கல்; ஜார்கண்ட் அரசுடன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மோதல்: மூலை முடுக்கெல்லாம் செல்வதால் அதிருப்தி

ராஞ்சி: எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அந்தந்த மாநில ஆளுநர்கள் சிக்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜார்கண்ட் மாநில அரசுடன் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது. பாஜக அல்லது பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்கள் தவிர, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்களை கொண்டு ஒன்றிய அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

குறிப்பாக டெல்லி, மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, பீகார், தமிழ்நாடு போன்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் மூலம் ஒன்றிய அரசு சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) – காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, அம்மாநில ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாஜக தலைவருமான சிபி ராதாகிருஷ்ணனின் நடவடிக்கைகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள் கூறுகையில், ‘ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், மாநிலத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் சென்று பல்வேறு சமூக மக்களையும் சந்திக்கிறார். உள்ளூர் மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு வருகிறார். ஆளுநரின் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆளும் கூட்டணி அரசுக்கு இடையூறாக உள்ளன. குறிப்பாக கூட்டணியை வழிநடத்தும் எங்களுக்கு (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) மிகுந்த அசவுகரியத்தை ஏற்படுத்தி வருகிறது’ என்று கூறினர்.

The post எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சிக்கல்; ஜார்கண்ட் அரசுடன் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மோதல்: மூலை முடுக்கெல்லாம் செல்வதால் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Governor ,CB Raadhakrishnan ,Jharkhand Government ,Ranchi ,Jharkhand state government ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...