×

தொடர்ந்து 5வது நாளாக பற்றியெரியும் பிரான்ஸ்; 2,560 தெருக்கள், 1,350 வாகனங்கள், 234 பொதுச் சொத்துக்களுக்கு தீவைப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் உடலடக்கம்; 2,000 பேர் கைது

பாரிஸ்: சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தால் பிரான்ஸ் நாடே பற்றி எரிவதால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வட ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவரும், அல்ஜீரியாவிலிருந்து புலம்பெயர்ந்த நஹேல் என்ற 17 வயது சிறுவனின் குடும்பம், பிரான்சின் பாரிசில் வசித்து வருகிறது. பாரிசின் புறநகர்ப் பகுதியில் கடந்த செவ்வாயன்று போக்குவரத்து வாகனச் சோதனையின்போது, காரை நிறுத்தாமல் சென்ற சிறுவன் நஹேல் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம், நான்கு நாள்களாக நாட்டையே பற்றியெரிய வைத்திருக்கிறது. நஹேலை சுட்டுக் கொன்ற 38 வயது போலீஸ் அதிகாரி, ‘அந்த சிறுவன் வேறு யார் மீதாவது காரை ஏற்றிவிடுவானோ’ என்ற அச்சத்தில் துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கலவரக்காரர்கள் கொள்ளையடிப்பதாகவும், பெற்றோர்கள் அனைவரும் தங்களின் பிள்ளைகள் யாரையும் வீதியில் இறங்கிப் போராடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இருப்பினும் சிறுவனின் மரணத்திற்கு நீதிகேட்டு ஐந்தாவது நாளாக நடக்கும் போராட்டம் கலவரமாகத் தொடர்ந்து வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில், தற்போதுவரை மொத்தமாக 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கூடவே வன்முறை நிகழும் இடங்களில் அதைக் கட்டுப்படுத்த சுமார் 45,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அரசு கட்டிடங்கள் சூறை, தீ வைப்பு, கல்வீச்சு போன்ற சம்பவங்களில் 2,560 தெருக்களுக்கு தீவைப்பு, 1,350 வாகனங்கள் தீவைப்பு, 234 பொதுச் சொத்துக்களுக்கு தீவைத்து சேதம், 31 காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கள், 16 மாநகர காவல் நிலையங்கள் மீது தாக்குதல்கள், 11 ஜெண்டர்மேரி முகாம் மீது தாக்குதல்கள், 200க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் பலியான நஹேலின் உடல் பாரிசின் நான்டெர்ரேயில் தகனம் செய்யப்பட்டது.

பிரான்சின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால், அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தனது ஜெர்மனிக்கான அரசுமுறை பயணத்தை ஒத்திவைத்தார். பிரான்சில் கலவரம் நீடிக்குமாகில், குளிர்காலத்தில் நடத்தப்படும் ‘ரக்பி’ உலகக் கோப்பை மற்றும் கோடையில் பாரிஸ் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் அங்கு நடக்கமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரான்சின் நிலைமையை உணர்ந்த இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தங்களது குடிமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளன.

The post தொடர்ந்து 5வது நாளாக பற்றியெரியும் பிரான்ஸ்; 2,560 தெருக்கள், 1,350 வாகனங்கள், 234 பொதுச் சொத்துக்களுக்கு தீவைப்பு: சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவனின் உடலடக்கம்; 2,000 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : France ,Arson ,streets ,Paris ,Dinakaran ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...