×

கோவையில் 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பேட்டி

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் நடைபெற்றது.

அதன்பின், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் 2023-2024ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கோவை மாநகரத்திற்கு ரூ.9000 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை முழுமையாக தயாராகும் நிலையில் உள்ளது. திட்ட அறிக்கையின் இறுதி கட்டமாக இன்று (நேற்று) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிற துறைகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அவர்களின் கருத்துக்களும் இதில் சேர்க்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை வரும் 15ம் தேதி அரசுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், அவினாசி சாலை மற்றும் சத்திசாலைகளில் இரண்டு உயர்மட்ட வழித்தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. 39 கி.மீ நீளத்திலும், 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் அவினாசி சாலையில் உக்கடம் முதல் நீலாம்பூர் ஏர்போர்ட் ஜங்ஷன் வரை 17 ரயில் நிலையங்களும், விமானநிலையத்திற்கு ஒன்றும், சத்தியமங்கலம் சாலையில் கோவை ஜங்ஷன் முதல் வையம்பாளையம் வரை 14 ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

3 ரயில் பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் திட்டமாக இருக்கும். ஒரு பெட்டியில் 250 பேர் வரை பயணிக்கலாம். விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு ஒன்றிய அரசின் அனுமதிபெற்று பன்னாட்டு நிறுவனங்களின் நிதிஉதவி பெற்று இத்திட்டம் செயல்படுத்திட தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டப்பணிகள் தொடங்கிய பிறகு பணிகள் நிறைவு பெற 3.5 ஆண்டு வரை ஆகும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டுள்ளோம்.

திட்டம் முழுவதும் உயர்மட்ட பாலமாகவே திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்க பாதைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை. இந்த திட்டத்திற்காக சுமார் 75 ஏக்கர் வரை அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவைப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக கோவை மாநகராட்சி அலுவலகம் அருகில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் களஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கோவை விமானநிலைய இயக்குநர் செந்தில்வேலவன், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post கோவையில் 32 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் திட்டம்: மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Metro Rail ,Govai ,Govai District Collector's Office ,Temple ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம்: 3...