×

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் விழா

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் விழா முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் காவிரி ஆற்றில் 1தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு காலை 9.15 மணிக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் உற்சவ நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு காலை 9.30 மணியளவில் திருமஞ்சனம் நடைபெற்றது.

மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்கள் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு தொண்டைமான் மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. அதன் பின் சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டு மாலை 4 மணிக்கு ஒப்புவிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை.

அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான முதல் தைலகாப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டன. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க முடியும். மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான இன்று (3-ந் தேதி) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ளே மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து சேர்க்கப்பட்ட சாதத்தை பெரிய பெருமாளுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவற்றை முன்னிட்டு நேற்று முழுவதும், இன்று மாலை வரை மூலஸ்தான சேவைக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் விழா appeared first on Dinakaran.

Tags : Numberumal Jeshthabishekam Festival ,Sriangam Renganadar Temple ,Srierangam ,Namberumal Jeshthabishekam ,Renghanadar Temple ,Earth Vikundam ,Jeshthabishekam ,Sriranangam Renganadar Temple ,
× RELATED திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கோபுர...