×

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் மூலவருக்கு இன்று தைல காப்பு

ஈரோடு, ஜூலை 2: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சுதையால் ஆன மூலவருக்கு இன்று தைல காப்பு சாற்றப்படுகிறது. ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற கமலவள்ளி தயார் சமேத கஸ்தூரி அரங்கநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலவரான கஸ்தூரி அரங்கநாதர் சிலை சுதையால் செய்யப்பட்டது. இதனால் மற்ற சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது போல், மூலவர் கஸ்தூரி அரங்கநாதர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இதற்கு பதிலாக ஆண்டிற்கு ஒரு முறை தமிழ் மாதம் ஆனியில் தைல காப்பு சாற்றப்படுகிறது. இதன்படி, அனந்த சயனத்தில் இருக்கும் பெரிய பெருமாளுக்கு இன்று (2ம் தேதி) தைல காப்பு சாற்றப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மதியம் 12.30 மணி வரை மட்டுமே மூலவரை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று (2ம் தேதி) காலை 7 மணிக்கு ஆனி கேட்டை பெரிய பெருமாளின் நட்சத்திரத்தை முன்னிட்டு விசேஷ பூஜை, ஹோமங்கள் நடத்தப்பட்டு, சுதையால் ஆன கஸ்தூரி அரங்கநாதருக்கு தைல காப்பு சாற்றப்படுகிறது. இதன்பின்னர், மூலவர் கஸ்தூரி அரங்கநாதர் திரை மறைவில் இருப்பார். பக்தர்கள் உற்சவ பெருமாளை வழிபட்டு செல்லலாம். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கயல்விழி கூறுகையில், ‘‘மூலவர் கஸ்தூரி அரங்கநாதர் சிலை சுதையால் ஆனது. ஆண்டிற்கு ஒரு முறை தைலகாப்பு சாற்றப்படும். அதன்படி, கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட தைலத்தை பதப்படுத்தி, மூலவருக்கு தைலகாப்பு சாற்றப்படும். இதன்பின்னர், ஒரு மண்டலத்திற்கு அதாவது 48 நாட்களுக்கு மூலவர் திரை மறைவில் இருப்பார். உற்சவ பெருமாளுக்கு 48 நாட்களுக்கு திருமஞ்சன வழிபாடு நடத்தப்படும். ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தைல காப்பு நிறைவு பெற்று மூலவர் மீண்டும் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்’’ என குறிப்பிட்டார்.

The post ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் மூலவருக்கு இன்று தைல காப்பு appeared first on Dinakaran.

Tags : Kasthuri Aranganathar temple ,Erode Fort ,Erode ,Erode Fort Kasturi Aranganathar Temple.… ,Erode Fort Kasturi ,Aranganathar ,Temple ,
× RELATED சாலையில் மயங்கி கிடந்தவர் பலி