×

ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்னையால் கர்ப்பிணிகள் சிரமம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவொற்றியூர், ஜூலை 2: ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்னையால் கர்ப்பிணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் ஊழியர்களோடு கர்ப்பிணிகளின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் வடசென்னை, புறநகர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். பழைய கட்டிடம், புது கட்டிடம் என 2 தளங்களில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் 3 தளம் கொண்ட கட்டிடத்தில் தரைத் தளத்தோடு சேர்த்து கர்பிணிகள் அனுதிக்கப்பட்டிருக்கும் 2வது தளத்தில் தண்ணீர் வராததால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேல் தளத்தில் இருக்கக்கூடிய பெண்கள் மருத்துவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளுக்கு மேலிருந்து கீழே இறங்கி வந்து செல்கின்றனர். பலரும் இந்த கழிவறையை உபயோகிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படக்கூடிய அபாயமும் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகளின் உறவினர்கள் இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையின் உள்ளேயே அமைந்துள்ள காவல் நிலையத்தில் பெண் போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து தற்காலிகமாக தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. நிரந்தர தீர்வு காணும் வகையில் உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு தண்ணீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கர்ப்பிணிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்னையால் கர்ப்பிணிகள் சிரமம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : RSRM Govt Maternity Hospital ,Thiruvottiyur ,Rayapuram ,RSRM Government Maternity Hospital ,Dinakaran ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...