×

₹25 கோடியில் திருப்பணி வரதராஜ பெருமாள் கோயிலில் வல்லுநர் குழுவினர் ஆய்வு

காஞ்சிபுரம், ஜூலை 2: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பணிகள் குறித்து இந்துசமய அறநிலையத்துறை மாநில அளவிலான வல்லுனர் குழுவினர் ஓய்வுபெற்ற தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் களஆய்வு செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது, 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில்களை சுமார் ₹100 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு செய்து, குடமுழுக்கு நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள உலக பிரசித்திபெற்ற அத்திவரதர் கோயில் என அறியப்படும் பழமையும், புராதனமும் உடைய வரதராஜ பெருமாள் கோயிலில் ₹25 கோடி செலவில் திருப்பணிகள் செய்து, குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை மாநில அளவிலான வல்லுனர் குழுவினர் ஓய்வுபெற்ற தொல்லியல் துறை கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில், ஸ்தபதி தட்சிணாமூர்த்தி, பொறியாளர் முத்துசுவாமி, தொல்லியல் கண்காணிப்பாளர் வசந்தி, பராமரிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர் ராமமூர்த்தி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, செயற்பொறியாளர் லால்பகதூர் ஆகியோர் கோயிலில் உள்ள கோபுரங்கள், அனைத்து சன்னதிகள், பிரகாரங்களை நேரில் களஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். இந்த ஆய்வின்போது வரதராஜ பெருமாள் கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், குமரக்கோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post ₹25 கோடியில் திருப்பணி வரதராஜ பெருமாள் கோயிலில் வல்லுநர் குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tirupani Varadaraja Perumal Temple ,Kanchipuram ,Hindu Charities Department ,Kanchipuram Varadaraja Perumal Temple ,Varadaraja Perumal Temple ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...