×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கால்நடை கழிவில் இயற்கை உரம் உற்பத்தி-மலர் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது

ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் நோக்கில் பூங்காவில் பல்வேறு இடங்களில் உள்ள அலங்கார பாத்திகளில் 200க்கும் மேற்பட்ட ரகங்களில் லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.இதுதவிர 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளிலும் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும். கோடை சீசன் மற்றும் இரண்டாவது சீசன் சமயங்களில் மலர் செடிகள் நடவு செய்யப்படுவது வழக்கம். மேலும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்பட்டு நடப்பட்ட பழமையான மரங்களும் இப்பூங்காவில் உள்ளன. இதனிடையே முழுமையான தோட்டக்கலை மாவட்டமாக விளங்கும் நீலகிரியில் இயற்கை விவசாயத்தை மாவட்ட நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. விவசாய பணிகளுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி வருகிறது.இதன் அடிப்படையில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள பூங்காக்களிலும் இயற்கை உரங்கள் பயன்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இயற்கை உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான பூங்காவின் மேற்பகுதியில் மாடுகள் வளர்க்க வசதியாக கொட்டகை அமைக்கப்பட்டு, கழிவுகளை உரமாக்க 3 தொட்டிகளும் கட்டப்பட்டது. அங்கு 2 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. மாடுகளின் சாணம் சேகரித்து வைக்கப்பட்டு தொட்டியில் நிரப்பப்படுகிறது. பூங்கா முழுவதும் விழுந்து கிடக்கும் இலைகள் சேகரிக்கப்பட்டு உரத்தொட்டியில் போடப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவை பூங்காவில் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கால்நடை வளர்ப்பின் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் 3 டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை உரம் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் செடிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ உரம் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றார்….

The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கால்நடை கழிவில் இயற்கை உரம் உற்பத்தி-மலர் செடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Government Botanical Zoo ,Feeder Government Botanical Park ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?