×

டீன்ஏஜ் சிறுவர்களுக்கு அநீதி நடக்கிறது பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் வயதை 16 ஆக குறைத்திடுங்கள்: மபி உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

குவாலியர்: ‘பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் பெண்களின் வயது 18 ஆக அதிகரிக்கப்பட்டது சமூகத்தின் கட்டமைப்பை சீர்குலைப்பதாக உள்ளது. இது டீன்ஏஜ் சிறுவர்களுக்கு அநீதி இழைக்கிறது. எனவே பெண்களின் பாலியல் சம்மத வயதை 16 ஆக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்’ என மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தி உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மைனர் சிறுமிக்கு டியூசன் எடுத்த 23 வயது வாலிபர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து, அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை உறவு கொண்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரை ரத்து செய்து மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் குவாலியர் கிளை நீதிபதி தீபல் குமார் அகர்வால் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: இந்த காலத்தில், சமூக ஊடக விழிப்புணர்வு மற்றும் எளிதில் அணுகக்கூடிய இணைய இணைப்பு காரணமாக ஆணும், பெண்ணும் 14 வயதிலேயே பருவமடைகின்றனர். இதன் காரணமாக, இரு பாலினத்தினரும் ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர். இது இறுதியில் ஒருமித்த பாலியல் உறவில் முடிகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் குற்றவாளி ஆகிறார்கள்.

கடந்த 2013ல் பெண்களின் பாலியல் உறவுக்கான சம்மத வயது 16ல் இருந்து 18 ஆக அதிகரிக்கப்பட்டது. இது சமூக கட்டமைப்பை சீர்குலைக்கிறது. இதன் காரணமாக, 18 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான குற்ற வழக்குகளில் டீன்ஏஜ் சிறுவர்களுக்கு அநீதி நடக்கிறது. பரஸ்பர சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டாலும், ஆண்கள் குற்றவாளியாக்கப்படுகின்றனர். இந்த அநீதியை நிவர்த்தி செய்ய பாலியல் உறவுக்கான சம்மத உறவை 18ல் இருந்து 16 ஆக குறைக்க ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

The post டீன்ஏஜ் சிறுவர்களுக்கு அநீதி நடக்கிறது பாலியல் உறவுக்கு சம்மதிக்கும் வயதை 16 ஆக குறைத்திடுங்கள்: மபி உயர் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Mabi High Court ,Gwalior ,Dinakaran ,
× RELATED லாலுவுக்கு கைது வாரண்ட்