×

மாஜி அமைச்சரின் பதவியை பறிக்க நினைக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘மா ங்கனி மாவட்டத்துல கரை வேட்டியை விட, காக்கி சட்டையுடன் உள்ள பெண் அதிகாரி எதற்காக சந்தோஷத்தில் மிதக்கிறார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி மாநகரில் லேடி காக்கி அதிகாரி ஒருவர் மீது, தொடர்ந்து வசூல் புகார் வந்துக்கிட்டே இருந்ததாம். பட்டியல் போட்டு வசூல் செய்வதில் அவரும் சளைத்தவர் இல்லை என்பது, மேல்மட்ட அதிகாரிகளுக்கு தெரியுமாம். இதையடுத்து டிரான்ஸ்பர் பட்டியலில் அந்த லேடி காக்கி அதிகாரி பெயரும் இருந்துச்சாம். எந்த நேரத்திலும் தான் மாற்றப்படலாம் என்பது, அந்த காக்கி அதிகாரிக்கு தெரிஞ்சிப் போச்சாம். இதற்கிடையில் நேரம் கிடைக்கும்போதெல்லாம், அதற்கு ஒருபடி மேல் உள்ள தன் அதிகாரி கிட்ட போய், கண் கலங்குவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருந்தாராம். இந்நிலையில் இடமாறுதல் பட்டியலில் அந்த பெண் காக்கி அதிகாரி பெயர் இல்லையாம். இதனால ஒட்டுமொத்த மாநகர அதிகாரிகளே ஷாக்காயிட்டாங்களாம். இதுல மூக்கை நுழைச்ச உளவுப்பிரிவும், மேலிட விவகாரமுன்னு ஒதுங்கிட்டாங்களாம். பெண் அதிகாரி மாற்றப்படாததற்கான காரணம் லேசாக கசிந்து இருக்காம். அழகு நிறைந்த ஏரியாவான அங்கு, அழகான ஆடைகளுக்கான ஷோரூம் இருக்காம். பல லகரங்களுக்கு பர்சேஸ் செஞ்சி மேல்மட்ட அதிகாரிகளுக்கு அன்பளிப்பா வழங்கினாராம். கரன்சி தானே பிரச்னை… வீட்டில் உள்ள குழந்தைகள், அம்மாக்களுக்கு துணியை கொடுத்தால் யாரும் மறுக்க மாட்டாங்க என்ற தத்துவத்தை கடைபிடித்தாராம் அந்த பெண் அதிகாரி. அதனால தான் டிரான்ஸ்பர் பட்டியலில் இருந்து அந்த இன்ஸ். பெயர் காணாம போச்சாம். இதனால உச்ச மகிழ்ச்சியில இருக்கும் அவரு, ரெண்டு ஸ்பா சென்டரை திறந்துவிட்டு, தன்னை யாரும் மாற்றமுடியாதுன்னு கட்டைவிரலை தூக்கி காட்டுறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ேதர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு எதிராக யார் என்ன செஞ்சா…’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறதாம். இதில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கடலூர், விழுப்புரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 3ம் ஆண்டு மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்குதாம். திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியோ, கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை புறக்கணித்துவிட்டு, கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் வைத்து விடைத்தாளை திருத்துகிறாராம். கடந்தாண்டு மாணவர்களின் தேர்வு முடிவில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு கவுரவ விரிவுரையாளர்களை வைத்து விடைத்தாள் திருத்தம் செய்வது பெரும் முறைகேட்டுக்கு வழி வகுத்திருப்பதாக கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர், விரிவுரையாளர்கள் வெளிப்படையாகவே சொன்னாங்களாம். இது தொடர்பாக எவ்வளவோ சொல்லியும் பதில் இல்லாத காரணத்தால் புகார்களை அனுப்ப வேண்டியவர்களுக்கு பேராசிரியர்கள் அனுப்பி இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ இலை கட்சியின் பொறுப்பில் அசைக்க முடியாமல் இடத்தில் அமர்ந்துள்ள சேலம்காரர், மாஜி அமைச்சர் மீது கடும் கோபத்தில் ஏன் இருக்கிறாராம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என 2 அணியாக உள்ளனர். இந்த 2 அணியிலுமே மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருக்காங்க. கடலோர மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் மாஜி அமைச்சர் மணியானவர், கட்சிகாரர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். கட்சியினரின் இல்ல நிகழ்ச்சிகளில் கூட தலை காட்டுவது கிடையாதாம். ஆனால், சில மாதங்களாக கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மணியானவர் தானாகவே முன்வந்து கலந்து கொள்கிறார். கடலோர மாவட்டத்தில் தேனிகாரருக்கு அதிக செல்வாக்கு பெருகி வருகிறது. இதனால் மணியானவர் மீது சேலம்காரர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். அது மிஸ்டர் பெல்லின் பதவி பறிக்கும் அளவுக்கு இருக்காம். கடலோர மாவட்டத்தில் உள்ள மணியானவர் பொறுப்புகளை பறித்து சிறப்பாக செயல்படுவோருக்கு கொடுக்கப்படவுள்ளதாம். இதில் அதிர்ச்சியடைந்த மணியானவர் தனது பதவிகளை தக்க வைத்துகொள்ள தானாக நிகழ்ச்சிகளில் வந்து கலந்து கொள்வதாக கட்சிக்குள்ளே பேச்சு ஓடுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு மானியம் எப்படி கிடைக்கும்னு சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல இருந்து மிஸ்டர் பத்தூர், குயின்பேட்டை மாவட்டங்கள் தனியாக பிரிக்கப்பட்டது. ஆனா, வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஆறு கொண்ட ஊர் ஆட்சி உட்பட 20 ஊர் ஆட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம்ன்ற திட்டம் குயின்பேட்டை மாவட்ட திட்ட அதிகாரி கன்ட்ரோல்லேயே இருக்காம். இந்த திட்ட அலுவலருங்க விவசாய குழுக்களை உருவாக்கி அதுசார்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வர்றாங்க. ஆனா, பல ஊர் ஆட்சிகள்ல இந்த குழுக்களை சேர்த்ததுல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்திருக்குது. குழுவ சேர்த்து மானியம் வழங்க சொன்னா, ஒரே வீட்டுல இருக்கவங்கல குழுக்கள்ல சேத்துட்டாங்களாம். இதுனால மற்ற விவசாயிங்களுக்கு அரசு வழங்குற வேளாண் கருவிகள் கிடைக்கலையாம். இதுல குறிப்பா பொன்னான ஆறு ஓடுற ஏரியாவுல பெயரோட முடிவுல குப்பம், சாத்துன்னு முடியுற பகுதிகள்ல முறைகேடுகள் அதிகளவுல நடந்துள்ளதாம். இந்த அதிகாரிங்க அவங்க பணியை சரியா செய்யாம முறைகேடுகள்ல ஈடுபடுறது எந்தவிதத்துல நியாயம்னு விவசாயிங்க மத்தியில புலம்பல் சத்தம் கேட்க தொடங்கியிருக்குது. இதனால அரசுக்கு தான் கெட்ட பெயர்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி அமைச்சரின் பதவியை பறிக்க நினைக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,Salemgarr ,minister wiki Yananda ,Ma Nangani ,Minister ,wiki ,Yananda ,
× RELATED தொடர் தோல்விகளால் எடப்பாடி...