×

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளரின் தம்பி கைது

விருதுநகர்: விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.71.50 லட்சம் மோசடி செய்த அதிமுக மாவட்ட செயலாளரின் தம்பி விஜயநல்லதம்பியை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே ராமதேவன்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர். இவரது தம்பி விஜயநல்லதம்பி. இவர் கடந்த 2020ல் அதிமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தார். இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவில் விஜயநல்லதம்பி கடந்த 2022ல் அளித்த புகாரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 7 பேரிடம், ரூ.68 லட்சத்தை அண்ணன் ரவிச்சந்திரன் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார். விசாரணையில், ஏமாற்றப்பட்டதாக கூறப்பட்ட 7 பேரும் பணத்தை, விஜயநல்லதம்பி தான் தங்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பெற்றதாக தெரிவித்தனர்.

விசாரணையில், பணத்தை ஏமாற்றியதுடன், அவரது அண்ணன் ரவிச்சந்திரன் மீது பொய் புகார் அளித்ததும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இவரிடம் டிரைவராக இருந்த கோட்டையூரை சேர்ந்த தங்கதுரை மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3.50 லட்சத்தை விஜயநல்லதம்பி வாங்கி ஏமாற்றியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணவேணி கடந்த 20.8.2022ல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பண மோசடி, நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விஜயநல்லதம்பியைதேடி வந்தனர். இதற்கிடையே மேலும் பலர் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் விஜயநல்லதம்பியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று மாலை கைது செய்தனர்.

The post அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளரின் தம்பி கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK district ,Virudhunagar ,Vijayanallathambi ,
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு