×

ஈமு கோழி மோசடி வழக்கில் 10ஆண்டு தண்டனை 2 போலீசாரை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பிய கைதி

சேலம்: ஈமு கோழி மோசடி வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதி, 2 போலீசாரை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அன்னதானப்பட்டி போலீசார், கடந்த 3 நாட்களுக்கு முன்பு லாட்ஜில் சோதனை நடத்தினர். அங்கு தங்கியிருந்த ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே பாப்பிசெட்டிப்பள்ளி ராசன்னப்பள்ளியை சேர்ந்த இனோஆண்ட்ரூஸ் (41) என்பரை பிடித்து விசாரித்ததில், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில், ஈமு கோழி மோசடி வழக்கில் கோவை டான்பிட் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 கோடியே 60 லட்சம் அபராதமும் விதித்ததும், தலைமறைவான அவரை தேடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அன்னதானப்பட்டி போலீசார் ஒப்படைத்தனர். போலீஸ்காரர்கள் செல்வகுமார், கேசவன் ஆகியோர், கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது 1ம்தேதி(நேற்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட இனோ ஆண்ட்ரூசை, 2 போலீசாரும் ஒரு லாட்ஜிற்கு அழைத்து சென்று இரவு அங்கு தங்கினர். இரவு 1.30 மணியளவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போலீஸ்காரர்களை அறையில் வைத்து பூட்டிவிட்டு இனோ ஆண்ட்ரூஸ் தப்பியோடி விட்டார். போலீசார் எழுந்து பார்த்த போதுதான் இனோஆண்ட்ரூஸ் தப்பியது தெரிய வந்தது. லாட்ஜ் ஊழியர்கள் வந்து அவர்களை மீட்டனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கோவை விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைதியை தப்ப விட்ட போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது.

The post ஈமு கோழி மோசடி வழக்கில் 10ஆண்டு தண்டனை 2 போலீசாரை லாட்ஜ் அறையில் வைத்து பூட்டி விட்டு தப்பிய கைதி appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...